தேசிய பாரா சாம்பியன்ஷிப் டேக்வாண்டோ போட்டி; சேலம் அரசு கல்லூரி மாணவி தங்கம் வென்று அசத்தல்
தமிழக முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினும் பொருள் உதவி மற்றும் பண உதவி செய்தால் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தங்கப் பதக்கம் வாங்கி தருவதற்கு உதவியாக இருக்கும்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் உள்ள லவ்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய பாரா சாம்பியன்ஷிப் டேக்வாண்டோ போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாணவி சௌந்தர்யா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா பிறவியிலிருந்து வளர்ச்சி குறைபாடு உள்ளவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சௌந்தர்யா சேலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். சௌந்தர்யாவிற்கு இரண்டு சகோதரிகள் உள்ளார்கள். அவர்களுக்கும் சௌந்தர்யா போலவே பிறவியிலிருந்து வளர்ச்சி குறைபாடு உள்ளது. இவர் தன் உயரத்தைப் பற்றி எண்ணாமல் வாழ்க்கையில் எவ்வாறு உயர வேண்டும் என சிந்தித்து கடந்த சில நாட்களாக டேக்வாண்டோ பயிற்சி எடுத்துக் கொண்டார். கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் சிவக்குமார் உதவியோடு டேக்வாண்டோவில் தீவிரப் பயிற்சி எடுத்துக் கொண்டு சௌந்தர்யா சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தேசிய பாரா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று, தற்போது தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அடுத்த மாதம் மெக்சிகோவில் நடைபெற உள்ள பாரா டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
பஞ்சாபில் நடைபெற்ற தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு திரும்பிய சௌந்தர்யாவிற்கு சேலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் காந்திமதி பாராட்டு தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். விளையாட்டில் மட்டுமின்றி படிப்பிலும் சௌந்தர்யா சிறந்த மாணவியாகவும், கல்லூரியில் உள்ள அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருவதாக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
இது குறித்து சௌந்தர்யா கூறுகையில், "சேலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை மற்றும் தாய் ஆத்தூரில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாபில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். இதன் மூலம் அடுத்த மாதம் மெக்சிகோவில் நடைபெற உள்ளது பாரா சாம்பியன்ஷிப் டேக்வாண்டோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசு கல்லூரியில் படித்து வரும் எனக்கு தமிழக முதல்வரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினும் பொருள் உதவி மற்றும் பண உதவி செய்தால் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தங்கப் பதக்கம் வாங்கி தருவதற்கு உதவியாக இருக்கும்" என கோரிக்கை வைத்தார்.