இதே நாளில் அன்று.. நினைவு கூர்ந்த சச்சின்.. வைரலாகும் புகைப்படம்..
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பையை வென்ற நாளான இன்று சச்சின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பையை வென்ற நாளான இன்று சச்சின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
கோப்பையை வென்ற இந்திய அணி:
கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்திய அணி வெற்றிபெறாது என்று பலரும் கணித்த நிலையில் கணிப்புகளை உடைத்து இந்திய அணி கடந்த ஆண்டு இதே நாளில் வெற்றிபெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை எடுத்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக்கோப்பையை முதன் முதலாகக் கைப்பற்றியது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது உலக அரங்கில் இந்தியாவின் இமேஜை உயர்த்தியது. அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி மீதான மதிப்பு பெருமளவு உயர்ந்தது. கவில் தேவ் தலைமையிலான இந்த அணியில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், அமர்நாத், சையத் கிர்மானி உள்ளிட்ட ஜாம்பவான்கள் விளையாடியிருந்தனர்.
83 திரைப்படம்:
இந்த போட்டியினை மையமாக வைத்து கபீர் கான் இயக்கத்தில், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் தயாரிப்பில் 83 என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. 2021ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் திரைப்பட ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இப்படத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதும் எல்லோரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அதில் சிறு வயது சச்சினும் இருப்பதாக காட்சி இடம்பெற்றிருக்கும்.
நினைவுகூர்ந்த சச்சின் :
உலகக் கோப்பையை இந்திய அணி முதன்முறையாக வெற்றிபெற்ற நாளான இன்று இதனை நினைவு கூர்ந்துள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், சில தருணங்கள் உங்களை ஊக்குவிக்கும் மற்றும் கனவு காண வைக்கும். 1983ம் ஆண்டு இதே நாளில் நாம் உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றோம். அதன் பிறகு நானும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று விரும்பினேன் என்று கூறியுள்ளார். இத்துடன், உலகக்கோப்பையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வாங்கும் புகைப்படம் மற்றும் 83 திரைப்படத்தில் சச்சின் இடம்பெற்ற காட்சியின் புகைப்படத்தையும் சச்சின் பகிர்ந்துள்ளார்.
இந்த ட்வீட்டானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்த பதிவு 2 லட்சத்து 70 ஆயிரம் லைக்குகளையும், ட்விட்டரில் 41,600 லைக்குகளையும் பெற்றுள்ளது.
View this post on Instagram