IOA New President: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா!
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இவர்தான் ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். இவர் தான் ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் இப்போதே குவியத் தொடங்கியுள்ளன.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் 3 முறை பங்கேற்று முதல் 10 இடங்களுக்குள் வந்தவர். சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ, விளையாட்டுத் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா ஆகிய விருதுகளைப் பெற்றவர். அண்மையில் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப்ஸ், ஒலிம்பிக், உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் உள்பட பல போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்காக நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை அள்ளி வந்தவர்.
1984 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சில மணித் துளி இடைவெளியில் பதக்க வாய்ப்பை இழந்தவர். ஒலிம்பிக்கில் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அடுத்த தலைமுறையை உருவாக்கி வருகிறார்.
முதல் பெண் தலைவர்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா திகழ்வார். 58 வயதான இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Heartfelt thanks to my team for their unconditional trust and support 🙏🏻 pic.twitter.com/djr1rR9rG9
— P.T. USHA (@PTUshaOfficial) November 27, 2022
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்று ஆகும். துணைத் தலைவர், இணைச் செயலர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்து ஒரு தலைவர், ஒரு சீனியர் துணைத்தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்), ஒரு பொருளாளர், இரண்டு இணைச் செயலாளர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்), 6 பிற நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
முன்னதாக, “மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி எனக்கு வழங்கி இருப்பது இந்திய விளையாட்டு துறைக்கு அளிக்கப்பட்ட கௌரவம் ஆகும். குறிப்பாக தடகள வீரர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்” என பெருமிதம் தெரிவித்திருந்தார் பி.டி.உஷா.
“தற்போதுள்ள தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். இதேபோன்று தடை ஓட்டம் , 100 மீட்டர் ஓட்டங்களில் வீரர்கள் நல்ல எதிர்பார்ப்பை கொடுத்துள்ளனர். நாங்கள் விளையாடிய காலத்தில் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு விளையாட்டு துறைக்கு செய்யப்படவில்லை. தற்போது மத்திய அரசு விளையாட்டு துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் எனக்கு பேச வாய்ப்பளிக்கும் போது விளையாட்டு துறை சார்ந்தே கோரிக்கைகளை முன்வைப்பேன். விளையாட்டு துறைக்கு இந்திய பிரதமர் அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை ஊக்கமளித்து வருகிறார்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.