Tokyo Olympics: ஒலிம்பிக் வில்வித்தை: மூன்றாவது சுற்றில் ஜப்பான் வீரரிடம் அடானு தாஸ் தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவு இந்திய வீரர் அடானு தாஸ் மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார் .
tடோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ் முதல் சுற்றில் சீன தைபே அணியின் செங்கை எதிர்த்து விளையாடினார். அதில் 6-4 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் அடானு தாஸ் தென்கொரிய வீரர் ஜின்ஹெக்கை எதிர்த்து விளையாடினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் 5-5 என சமமாக இருந்ததால் ஷூட் ஆஃப் முறைக்கு போட்டி சென்றது. அதில் தென்கொரிய வீரரை வீழ்த்தி அடானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அடானு தாஸ் ஜப்பான் வீரர் ஃபுருகாவாவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை ஜப்பான் வீரர் ஃபுருகாவா 27-25 என்ற கணக்கில் வென்று 2-0 என முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இருவரும் தலா 28 புள்ளிகள் எடுத்தனர். இதனால் இருவருக்கும் ஒரு செட் புள்ளிகள் வழங்கப்பட்டன. ஜப்பான் வீரர் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். மூன்றாவது செட்டை 28-27 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்று 3-3 என சமம் செய்தார். நான்காவது செட்டிலும் இரு வீரர்களும் 28-28 என சமமாக புள்ளிகள் எடுத்தனர். இதனால் 4-4 என இருவரும் சமநிலையில் இருந்தனர். போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டை ஜப்பான் வீரர் 27-26 என வென்றார். அதன்மூலம் போட்டியையும் 6-4 என்ற கணக்கில் வென்றார். இதனால் அடானு தாஸ் வில்வித்தை போட்டியிலிருந்து வெளியேறினார்.
#Archery : Atanu Das goes down fighting to London Olympic medalist Takaharu Furukawa 4-6 in Pre-QF.
— India_AllSports (@India_AllSports) July 31, 2021
Earlier Atanu had got the better of London Olympic Gold medalist Oh Jin-hyek in Pre-QF.
Thats END of Indian challenge in Archery. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/XPrasLnGmL
முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். காலிறுதியில் அவர் தென்கொரிய வீராங்கனை அன் சானை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்கொரிய வீராங்கனை 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தீபிகா குமாரியின் பயணமும் முடிவிற்கு வந்தது.
ஏற்கெனவே ஆடவர் குழுப் பிரிவில் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் தென்கொரிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது. அதேபோல் கலப்பு பிரிவில் பிரவீன் ஜாதவ் மற்றும் தீபிகா குமாரி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எலிசன் ப்ராடியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு இந்திய வீரர் தருண்தீப் ராய் இஸ்ரேல் வீரர் இடேவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். இதனால் டோக்கியோ வில்வித்தை போட்டிகளில் இந்தியாவிற்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
மேலும் படிக்க:‛சில்வர்’ சிந்து... ’கோல்ட்’ சிந்துவாக இந்தியா திரும்புவாரா? அரை இறுதியில் என்ன நடக்கும்?