Tokyo Olympics: மகளிர் குத்துச்சண்டையில், பூஜா ராணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தல் !
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கிலோ),மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ). லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் விகாஸ் கிருஷ்ணன், மணிஷ் கௌசிக், ஆஷிஷ் குமார் ஆகிய மூவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
இந்நிலையில் மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் இரண்டாவது சுற்றில் பூஜா ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பூஜா ராணி அல்ஜிரியா நாட்டைச் சேர்ந்த செயிப் இசார்க்கை எதிர்த்து சண்டை செய்தார். இதில் முதல் ரவுண்டில் அல்ஜிரியா வீராங்கனையை சிறப்பாக தாக்கி புள்ளிகளை பெற்றார். அதேபோல் இரண்டாவது ரவுண்டிலும் பூஜா ராணி அசத்தலாக விளையாடினார். இரண்டு சுற்றுகளில் பூஜா ராணி அல்ஜிரிய வீராங்கனையைவிட அதிகமான புள்ளிகளை பெற்றார். மூன்றாவது சுற்றில் சரியான தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜிரியா வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்த சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் இவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகிவிடும். இதனால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் குத்துச்சண்டை விளையாட்டில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.
News Flash: #Boxing : Pooja Rani sails into QF (75kg) with comfortable 5:0 win over Algerian pugilist in 1st round.
— India_AllSports (@India_AllSports) July 28, 2021
✨ Pooja is now just one win away from an #Olympics medal. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/kwe2SNudxs
ஏற்கெனவே நேற்று நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் ஜெர்மனியின் நடின் ஏப்டெஸை 3-2 என வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவரும் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெரும் பட்சத்தில் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துவிடுவார். ஆகவே இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் மற்றும் சதீஷ் குமார் ஆகிய இருவரும் இன்னும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கவில்லை. சதீஷ் குமார் நாளை களமிறங்க உள்ளார். அமித் பங்கால் தன்னுடைய பிரிவில் வரும் 31ஆம் தேதி களமிறங்க உள்ளார். மேரி கோம் தன்னுடைய இரண்டாவது சுற்று போட்டியில் நாளை களமிறங்க உள்ளார்.
மேலும் படிக்க: டோக்கியோ விமானத்தை தவறவிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்.. அப்புறம் என்ன ஆனது?!