Paris Olympic 2024: முதல் முறையாக நடக்க இருக்கும் சுவாரஸ்யம்! இன்று கோலாகலமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகள் இன்று தொடங்க உள்ளது.
Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இன்று அணிவகுப்பில் ஈடுபட உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள்:
உலகின் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும், விளையாட்டு உலகின் உச்சபட்ச நிகழ்ச்சிக்காக ஒலிம்பிக் போட்டி திகழ்கிறது. பண்டைய கிரேக்க நாட்டில் மதசடங்கு மற்றும் கடவுளின் புகழை பரப்பும் ஒரு விழாவாக உருவான ஒலிம்பிக், ரோமானியர்களின் படையெடுப்புகளால் நசுங்கிப் போனது. அதன் பிறகு கடந்த1896-ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் அறிமுகமானது. அதிலிருந்து ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த முறை பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. அதற்கான தொடக்க விழா இன்று நடபெறுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024:
ஒட்டுமொத்த விளையாட்டு பிரியர்களும் பெரிதும் எதிர்பார்த்த, 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. 'பிரேக்கிங்' என்ற போட்டி இந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் ஆகிறது. வரும் 11ம் தேதி வரை இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.
வீரர்களின் அணிவகுப்பு:
ஒலிம்பிக் போட்டிகளில் ரசிகர்களை பெரிதும் கவரக்கூடியது, வீரர்களின் அணிவகுப்பாகும். இதில் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர்களும், தங்களது தேசியக்கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பில் ஈடுபடுவர். முதல் நாடாக ஒலிம்பிக்கை அறிமுகப்படுத்திய கிரீஸ் நாட்டு வீரர்களும், கடைசி நாடாக போட்டியை நடத்தும் பிரான்ஸ் வீரர்களும் அணிவகுப்பில் ஈடுபட உள்ளனர். அகர வரிசைப்படி இந்தியாவிற்கு 84வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இருவரும் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்.
94 படகுகளில் பிரமாண்ட அணிவகுப்பு:
வழக்கமாக இந்த தொடக்க நிகழ்ச்சிகள் மைதானத்தில் தான் நடைபெறும். ஆனால், இந்த முறை பாரிஸ் நகரில் உள்ள செய்ன் நதிக்கரையில் தொடக்க விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க ஆற்றில் மற்றும் விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே நடைபெறும் முதல் ஒலிம்பிக் தொடக்க விழா இதுவாகும். மூன்று மணி நேரம் மற்றும் 45 நிமிடங்கள் விழா நடைபெற உள்ளது. இதில் 206 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 7,000 பேர், ஆறு கிலோமீட்டர் (3.7 மைல்) தூரத்திற்கு 94 படகுகளில் பயணம் செய்ய உள்ளனர். அதோடு, விழா நடைபெறும் பகுதி, கண்களை கவரும் விதமாக வண்ண விளக்குகளாலும், லேசர் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நடனம், பாடல், டிரோன் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவை உலகம் முழுவதும் குறைந்தது ஒரு பில்லியன் மக்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் உலக தலைவர்கள்:
சுமார் 326,000 பார்வையாளர்கள் ஆற்றின் கரைகள் மற்றும் பாலங்களில் அடுக்கப்பட்ட இருக்கைகளில் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதையில் உள்ள 80 பெரிய திரைகளிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா மற்றும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் போன்ற சர்ச்சைக்குரிய பிரமுகர்கள் உட்பட சுமார் 100 நாட்டுத் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.
உச்சபட்ச பாதுகாப்பில் பாரிஸ்:
உலக தலைவர்கள் பங்கேற்பதை ஒட்டி பாரிஸ் நகரமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வீரர்களுக்கான அணிவகுப்பிற்கு பயன்படுத்தபப்டும் 94 படகுகளில் ஒவ்வொன்றும் பிரான்சின் உயரடுக்கு GIGN பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் 45,000 போலீஸ் அதிகாரிகள், 20,000 தனியார் பாதுகாப்பு முகவர்கள், 18,000 ராணுவ வீரர்கள் நகரைச் சுற்றி ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாரிஸை சுற்றியுள்ள 150 கிலோமீட்டர் சுற்றளவுக்கான வான்வெளி மாலை 6:30 முதல் நள்ளிரவு வரை மூடப்படும்.