PARALYMPICS: இரு கைகள் இல்லை... ஆனால் நீச்சலில் 4 தங்கப் பதக்கங்கள்!
சிறுவயதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் சிக்கி 2 கைகளையும் இழந்துள்ளார் செங் டோ. இருப்பினும் விடா முயற்சியுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்து வென்று காட்டி இருக்கிறார்.
உலக விளையாட்டுப் பிரியர்களுக்கு ஒலிம்பிக் என்றாலே ஒரு பிரம்மிப்பூட்டும் நிகழ்வாக இருக்கும். ஆனால், ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த பிறகு நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள், ஒலிம்பிக்கை விட கூடுதல் பிரமிப்பையும் காண்போர் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது.
காரணம், இதில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் பல்வேறு வலிகளையும் வேதனைகளையும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் தொடர் முயற்சியையும் கடந்து இந்த நிலையை அடைந்து இருக்கின்றனர். உடலில் ஏதாவது குறை என்றாலே வாழ்க்கை பாழாகிவிட்டதுபோல் பார்த்து பரிதாபப்படும் சமூகத்தில், அத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க முடியும் என தடைகளை தகர்த்து எரிந்து ஒரு அடி எடுத்து வைக்கும்போது அவன் வீரனாகி விடுகிறான்.
இப்படித்தான் சேலத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கத்தையும், வெள்ளியையும் வாங்கிக் கொடுத்தார் மாரியப்பன் தங்கவேலு. இதுபோல் தான் சீனாவை சேர்ந்த பாராலிம்பிக் வீரர், உடல் உறுப்புகள் இல்லாவிட்டாலும், வாழலாம், சாதிக்கலாம் என்ற பாடத்தை உலகுக்கே எடுத்து உள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் 2020 பாராலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்றுள்ள சீனாவை சேர்ந்த செங் டோ என்ற நீச்சல் வீரர், அந்நாட்டுக்காக 4 பதக்கங்களை வென்று குவித்து உள்ளார். இந்த நான்குமே தங்கப்பதக்கங்கள். ஆடவருக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக், ஆடவருக்கான 50 மீட்டர் பட்டர்ஃப்ளை, ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், கலப்பு 4X50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ரிலே என்ற 4 வகையான நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்து உள்ளார்.
இதன் மூலம் 1984 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சீனாவின் 500-வது பாராலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த வீரர் என்ற பெருமை செங் டோ வசமாகி இருக்கிறது. இதில் மேலும் ஒரு வியக்க வைக்கும் தகவல் என்னவென்றால் செங் டோவுக்கு 2 கைகளுமே கிடையாது. இருந்தாலும் விடாமல் போராடி அசத்தி, கைகள் இல்லாமலும் நீச்சல் அடிக்கலாம் என உலகத்துக்கு பாடம் புகட்டி உள்ளார்.
30 வயதாகும் செங் டோவை ARMLESS SWIMMER (கைகளற்ற நீச்சல் வீரர்) என்றே பலராலும் அழைக்கப்பட்டு வருகிறார். 2004-ம் ஆண்டு சீனாவுக்காக நீச்சல் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய செங் டோ, 2012 லண்டன் பாராலிம்பிக்கில் தங்கமும், 2016 பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.
இத்தனை சாதனைகளை படைத்த செங் டோவுக்கு பின்னால் சோகக் கதை உள்ளது. அவர் 2 கைகளுடன் தான் பிறந்துள்ளார். ஆனால், சிறுவயதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் சிக்கி 2 கைகளையும் இழந்துள்ளார் செங் டோ. இருப்பினும் விடா முயற்சியுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்து வென்று காட்டி இருக்கிறார்.