Ziva Dhoni: தோனியின் மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்த மெஸ்ஸி..? அப்படி என்ன பரிசு தெரியுமா?
இந்தியாவை உலக சாம்பியனாக்கிய மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவாவும் மெஸ்ஸியின் ரசிகை என்பது உங்களுக்குத் தெரியுமா?
கோப்பையை வென்ற மெஸ்ஸி:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பை தொடரிலாவது, கோப்பையை கைப்பற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பான போட்டியில் சிறப்பான பங்களிப்பு அளித்து கோப்பையை கைப்பற்றினார் மெஸ்ஸி. மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த போட்டியை கண்டுகளித்தனர்.
அர்ஜென்டினாவின் வெற்றி இந்தியாவிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மெஸ்ஸிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இறுதிப்போட்டியில் தனது ஆட்டத்தால் ரசிகர்களின் மனதையும் வென்றார், ஆனால் இந்தியாவை உலக சாம்பியனாக்கிய மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவாவும் மெஸ்ஸியின் ரசிகை என்பது உங்களுக்குத் தெரியுமா?
View this post on Instagram
ஆம், ஃபிபா உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினாவின் வெற்றியை ஜிவாவும் கொண்டாடுகிறார். தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மகள் ஜிவாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் ஜீவா அர்ஜென்டினா ஜெர்சி அணிந்துள்ளார். இதுமட்டுமின்றி, அவரது ஜெர்சியில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் ஆட்டோகிராப் உள்ளது. இதனால், மகிழ்ச்சிடைந்த ஜிவா, முகத்தில் அவ்வளவு சிரிப்புடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த தோனியின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கியதுடன், ட்விட்டர் பக்கத்தில் #zivadhoni என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்தனர்.
இந்த புகைப்படங்கள் ஜிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரப்பட்டது. மெஸ்ஸி கையெழுத்திட்ட டி- சர்ட்டானது டிசம்பர் 25 ம் தேதி ஜிவாவுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக கிடைத்துள்ளது.
கால்பந்து மீதான எம்.எஸ். தோனியின் காதல்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர். பள்ளிப் பருவத்தில் கால்பந்து வீரராக இருந்துள்ளார். பள்ளி நாட்களில் தோனி தனது அணியின் கோல்கீப்பராக இருந்தார். இவரது கோல்கீப்பிங் திறமையை பார்த்து விக்கெட் கீப்பிங்கிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியின் பயிற்சியில் கூட தோனி மற்ற வீரர்களுடன் கால்பந்து விளையாடுவதை பல வீடியோக்களில் பார்த்து இருக்கிறோம். தோனி பல தொண்டு போட்டிகளிலும் கால்பந்து விளையாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.