மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கபடி
மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கபடி விளையாட்டு சேர்ப்பு தேர்வு நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே இந்த இடத்தில் மட்டும்தான் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் நிரந்தர சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. கூடைப்பந்து, கைப்பந்து, கபாடி மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இங்கு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கு கடந்த 2 ஆண்டுகளாக கபடி பயிற்சியாளர் இல்லாததால் கபடி பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, இப்பயிற்சி மையத்தில் மீண்டும் கபடி விளையாட்டை சேர்க்க அமெச்சூர் கபடி கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக இந்த ஆண்டு முதல் மயிலாடுதுறையில் மீண்டும் கபடி விளையாட்டு சேர்க்கப்படும் என்றும், அதற்கான வீரர்-வீராங்கனை தேர்வு இன்று நடைபெறும் என கடந்த மாதம் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, கபடி விளையாட்டு வீரர் - வீராங்கனைக்கான தேர்வு இன்று நடைபெற்றது. 9 வீரர்கள், 10 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற இத்தேரவில் 700 வீரரர்கள் மற்றும் 200 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இதனை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவரும், அமெச்சூர் கபடி கழக மாநில தலைவருமான சோலைராஜா கலந்துகொண்டு, பொறுக்குத்தேர்வை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் மயிலாடுதுறையில் மட்டும்தான் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியகம் நிரந்தரமாக செயல்படுகிறது. சேலம் உள்ளிட்ட பிற இடங்களில் தமிழக விளையாட்டு ஆணைய இடத்தில்தான் செயல்படுகிறது. எனவே, முதற்கட்டமாக கபடி விளையாட்டுக்கு மயிலாடுதுறையில் நேஷனல் ஆஃப் சென்டர் எக்ஸலன்ஸி தொடங்குவதாற்கான பணிகள் நடைபெறுகிறது, அவ்வாறு நேஷனல் ஆஃப் சென்டர் எக்ஸலன்ஸி கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட இருக்கிறோம்” என்றார். இந்நிகழ்வில் போது, மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் ரஜினி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.