Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்
கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
லக்ஷயா சென் சாம்பியன்:
கனடாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நடப்பாண்டு ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரின் சாம்பியனான சீனாவை சேர்ந்த லி ஷிஃபெங்கை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென், 21-18, 22-20 என்ற நேர் செட்களில் லி ஷிஃபெங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் தொடரை, லக்ஷயா சென் வெல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு உள்நாட்டில் நடைபெற்ற இந்தியா ஓபன் தொடரை அவர் வென்றிருந்தார். அதோடு, சரியாக 11 மாதங்களுக்குப் பின் முதன்முறையாக சர்வதேச போட்டியில் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கனடா ஓபன் தொடரில் லக்ஷயா சென்:
உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 19வது இடத்தில் உள்ள லக்ஷ்யா சென், தரவரிசைப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள குன்லவுட் விடிட்சார்னை சூப்பர் 32 சுற்றில் வீழ்த்தினார். சூப்பர் 16 சுற்றில் கராகியை வீழ்த்தினார். அரையிறுதியில் தரவரிசைப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ள, ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டாவை வீழ்த்தினார். அதைதொடர்ந்து, இறுதிப்போட்டியில் லி ஷிஃபெங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
காயத்தில் இருந்து மீண்ட லக்ஷயா சென்:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று லக்ஷயா சென் தங்கம் வென்றார். அதைதொடர்ந்து, மூக்கில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து பாதியில் விலகி அறுவை சிகிச்சை மேற்கொண்டார். நீண்ட ஓய்விற்குப் பிறகு, அண்மையில் நடந்து முடிந்த தாய்லாந்து ஓபன் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். அந்த தொடரில் அவர் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை தந்த லக்ஷயா சென்:
அடுத்த மாதம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் செப்டம்பர் மாதம் சீனாவில் ஆசிய போட்டிகள் என அடுத்தடுத்து முக்கிய தொடர்கள் நடைபெற உள்ளன, இந்நிலையில், லக்ஷ்யா சென் சாம்பியன் பட்டம் வென்று இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இந்தியாவில் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்துவும் கனடா ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார். ஆனால், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான யமாகுச்சியிடம் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார். சிங்கப்பூர் ஓபன்பேட்மிண்டனை தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக யமாகுச்சியிடம் சிந்து தோல்விய சந்தித்தார். காயத்தில் இருந்து மீண்ட பிறகு, 11 தொடர்களில் பங்கேற்ற அவர் 3 தொடர்களில் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால், ஒரு தொடரில் கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.