Japan Olympic: உள்ளூர் ரசிகர்களுக்கு அனுமதி, கொரோனாவில் இருந்து தப்புமா ஒலிம்பிக்?
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களில் 10,000 பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என ஜப்பான் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு அறிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களில் 10,000 பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என ஜப்பான் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு அறிவித்துள்ளது.
உள்ளூர் ரசிகர்கள்
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஜப்பான் வந்து ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
எனினும், கொரோனா பரவல் அதிகமானால், மூடப்பட்ட மைதானங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஜப்பான் அரசு, டோக்கியோ அரசு, ஒலிம்பிக் தொடர் அமைப்பாளர்கள் குழு, சர்வதேச ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு, பாரலிம்பிக் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
உலக சுகாதார மையம் தலையீடு
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது குறித்து ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுவரை, ஜப்பானில் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 14,500 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். முக்கியமாக, இதுவரை 6.5 சதவிகிதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தயக்கம் காட்டும் நட்சத்திர வீரர்கள்
ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது குறித்து வெவ்வேறு விளையாட்டுகளை சேர்ந்த நட்சத்திர வீரர் வீராங்கனைகளும் தயக்கம் காட்டுகின்றனர்.
டென்னிஸில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான ரஃபேல் நடால், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். “சாதாரண சூழலில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து எந்த குழப்பமும் இருந்திருக்காது. ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவீர். ஆனால், இக்கட்டான சூழலில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் இரண்டும் மாத காலம் உள்ள நிலையில், சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்
நடால் மட்டுமல்ல, டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா, வீரர் கெய் நிஷிகோரி ஆகியோரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் எதிர்ப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அந்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஜப்பான் நாட்டு மக்களும் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.கியோடோ நியூஸ் என்ற நிறுவனம் ஜப்பான் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், பெரும்பாலானோர் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பிரச்சனை
The delta variant is expected to be peak in Japan coinciding with the Olympics
— Eric Topol (@EricTopol) June 16, 2021
End of May https://t.co/t6RYIZYbFE (delta is green)
Projection https://t.co/kl0b4XaKTh#TokyoOlympics pic.twitter.com/er6XFY0qiP
ஒலிம்பிக் தொடர் நடைபெற இருந்தால், உலகெங்கிலும் இருந்து 10,000க்கும் அதிகமான விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது சந்தேகம் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவில், பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு நடைபெற்று வந்த ஐபில் தொடர், கொரோனா பரவல் காரணமாக, வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பூட்டிய மைதானத்திற்குள்ளே கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் நிலவுவதால், ஒலிம்பிக் போன்ற பிரமாண்டமான விளையாட்டு தொடரை பாதுகாப்பான முறையில் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.