ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..?
கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார்.
கெய்ரோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை 14 வயதான திலோத்தமா வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நேற்று கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார்.
யார் இந்த திலோத்தமா..?
திலோத்தமாவுக்கு கைப்பந்து மற்றும் கராத்தே விருப்பமான விளையாட்டுகளில் ஒன்று. கடந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டில் அமர்ந்து பெரும்பாலான நேரம் போகோ சேனலில் சோட்டா பீம் மற்றும் பிற கார்ட்டூன்களை பார்த்து நேரத்தை போக்கி வந்துள்ளார். அந்தநேரத்தில், இண்டோர் விளையாட்டில் ஏதாவது ஒன்றை பயில பெற்றோர்களான சுஜித் - நந்திதா கட்டாயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஏற்பட்டுள்ளார். நாளடைவில் அதன் மீது ஆர்வம் அதிகரித்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள பயிற்சியாளர்கள் மற்றும் அகாடமியில் தனது துப்பாக்கி சுடும் திறமையை வளர்த்துகொண்ட திலோத்தமா, சில மாதங்களுக்குள் கர்நாடக மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 400/400 மதிப்பெண்களை எடுத்தார்.
கடந்த 2021 தேசியப் போட்டி ஜூனியர் பிரிவில் ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கமும், கடந்த ஆண்டு தேசியப் போட்டிகளில் சீனியர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ஆறாவது இடத்தை பிடித்து அசத்தினார்.
The day ends well for 🇮🇳 at the ISSF Shooting World Cup.
— SAI Media (@Media_SAI) February 21, 2023
Its🥉for 🇮🇳 in the 10m Air Rifle Women's Event!
14yr old Tilottama brings glory for the nation as she becomes 🇮🇳's youngest medalist in the Sr. Shooting World Cup 🥳
Heartiest congratulations champ👏 pic.twitter.com/cbsXAfuLUs
பதக்கம் வென்ற பிறகு பேசிய திலோத்தமா, “ பயிற்சியின் தொடக்கத்தில் துப்பாக்கி மற்றும் ஜாக்கெட்டுடன் இருந்தது எனக்கு மிகுந்த சோர்வை தந்தது. அதை பழக எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தது. இதற்காகவே அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டேன். துப்பாக்கி சுடுவதையும் மிகவும் ரசித்தேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ நான் எப்போதும் யாரையும் போட்டியாளராக நினைக்க மாட்டேன். என்னை மட்டுமே போட்டியாக நினைப்பேன். என் எதிரில் ஒலிம்பிக் சாம்பியனாக இருந்தாலும் அதை பற்றி கவலை படமாட்டேன். போட்டியின் தொடக்கத்தில் தடுமாறினேன். ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் என்னால் இங்கு பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.
திலோத்தமாவின் தந்தை சுஜித் இதுகுறித்து பேசுகையில், “ பயிற்சி செய்ய திலோத்தமாவிற்கு துப்பாக்கி வாங்க ரூ. 2.32 லட்சமும், ஜாக்கெட் வாங்க ரூ. 65,000 தேவைப்பட்டது. இதை என் சேமிப்பிலிருந்து அவருக்கு செலவழித்தேன். பயிற்சியின்போது தினமும் என்னுடன் பைக்கில் அகாடமிக்கு வருவார். திலோத்தமா பயிற்சி செய்யும்போது, நான் நாள் முழுவதும் என் மடிக்கணினியில் வேலை செய்வேன், அவளுடைய பயிற்சி முடிந்தபிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக மாலை வீடு திரும்புவோம்” என்றார்.