ISSF Shooting World cup 2022: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் வென்ற கோஷ்-மானே ஜோடி
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் கலப்பு ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் தென்கொரியாவின் சங்க்வான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் கலப்பு ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் மெஹூலி கோஷ், துஷார் மானே, இளவேனில் வாலறிவன் மற்றும் அர்ஜூன் பாபுதா ஆகியோர் பங்கேற்றனர்.
10 மீட்டர் கலப்பு ஏர் ரைஃபிள் தகுதிச் சுற்று போட்டியில் மெஹூலி கோஷ் மற்றும் துஷார் மானே சிறப்பாக துப்பாக்கிச் சுடுதல் செய்தனர். இவர்கள் இருவரும் 60 வாய்ப்புகளில் 634.4 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பெனி மற்றும் எஸ்டார் இணை 630.3 புள்ளிகளை பெற்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் மெஹூலி கோஷ் மற்றும் துஷார் மானே மற்றும் ஹங்கேரியின் பெனி மற்றும் எஸ்டார் இணைக்கு தங்கப்பதக்கத்திற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 17-13 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்றது. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றது.
Brilliant news to start off the day folks: Mehuli Ghosh & Tushar Mane win GOLD medal in 10m Air Rifle Mixed team event at Changwon Shooting World Cup.
— India_AllSports (@India_AllSports) July 13, 2022
The Indian duo best Hungarian team 17-13 in Gold medal match. pic.twitter.com/RI6QYCcb4q
10 மீட்டர் கலப்பு ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்ற இளவேனில் வாலறிவன் மற்றும் அர்ஜூன் பாபுதா இணை தகுதிச் சுற்றில் 627.8 புள்ளிகள் எடுத்து 8வது இடம்பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் சிவா மற்றும் பாலக் ஜோடி தகுதிச் சுற்றில் 574 புள்ளிகள் பெற்றது. இதன்மூலம் இந்த ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க உள்ளது.
முன்னதாக ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார். அதற்குபின்பு தற்போது இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய அணி தற்போது 2 தங்கப்பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்