Virat Kohli: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டி.. விராட் கோலி படைக்கப்போகும் சாதனைகள்..
ஐபிஎல் தொடரில் பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார்.
ஐபிஎல் தொடர்:
நடப்பாண்டுக்கான ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் கோலகலமாக தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருவதால் ரசிகர்களும் ஆர்வமுடன் ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்து வருகின்றனர். கடந்தாண்டைப் போல இந்த சீசனிலும் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதுவரை 8 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்கள் முதல் போட்டியில் விளையாடி விட்டன. இன்று நடக்கும் 9வது ஆட்டத்தில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டமானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
கோலி சாதனைகள்:
இன்றையை போட்டியில் களமிறங்குவதன் மூலம் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன், விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார். மும்பை அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடி, அவுட்டாகாமால் 82 ரன்களை சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் காரணமாக தற்போது ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியிலும் நீடிக்க்கிறார்.
100வது கேட்ச் யார்?
கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தான் ஐபிஎல் தொடரில் கோலி அறிமுகமானார். அதனை தொடர்ந்து இன்று கோலி களமிறங்கும் போட்டி பெங்களூரு அணிக்கான 225வது போட்டியாகும். ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன் ஆக மட்டுமின்றி, சிறந்த பீல்டராகவும் கோலி உள்ளார். அதன்படி, இதுவரை 94 கேட்சுகளை பிடித்துள்ள கோலி, 100 கேட்சுகளை பூர்த்தி செய்ய இன்னும் 6 கேட்சுகள் மட்டுமே தேவைப்படுகின்றன. இந்த பட்டியலில் ரெய்னா, பொல்லார்ட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
11,500 ரன்களை பூர்த்தி செய்வாரா?
டி-20 போட்டிகளில் 11,500 ரன்களை பூர்த்தி செய்ய கோலிக்கு இன்னும் 92 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் 500 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் அவருக்கு 29 ரன்கள் தேவைப்படுகிறது. கொல்கத்தா அணியின் முன்னணி பந்துவீச்சாளராக உள்ள உமேஷ் யாதவிற்கு எதிராக, கோலி 175 ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருப்பதால் இன்று அவர் ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனான ராணாவும், ஈடன் கார்டன் மைதானத்தில் 500 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 8 ரன்கள் மட்டுமே மீதமுள்ளது.
50 அரைசதங்கள் விளாசிய கோலி:
முன்னதாக மும்பை அணிக்கு எதிராக 82 ரன்களை சேர்த்ததால் ஐபிஎல் தொடரில் 50 அரைசதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். அதோடு கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவிலியர்ஸை தொடர்ந்து, பெங்களூரு மைதானத்தில் 100 சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.