IPL PBKS WIN : ஷிகர்தவான், லிவிங்ஸ்டன் அபாரம்...! 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்..!
IPL GT vs PBKS : ஷிகர்தவான், பனுகா மற்றும் லிவிங்ஸ்டன் அதிரடியால் பஞ்சாப் அணி குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தமிழக வீரர் சாய் சுதர்சனின் அபார ஆட்டத்தால் குஜராத் அணி பஞ்சாப் அணிக்கு 144 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் பவுண்டரிகளாக விளாசி அதிரடி தொடக்கத்தை அளித்தார். ஆனால், மறுமுனையில் ஜானி பார்ஸ்டோ 1 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, தவானுடன் பனுகா ராஜபக்சே ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணி 4 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணிக்காக ஷிகர்தவான் தொடர்ந்து சிறப்பாக ஆடினர். அவரது ஆட்டத்தால் பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 42 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணிக்காக ஷிகர் தவான் அதிரடி காட்ட மறுமுனையில் பனுகாவும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 76 ரன்களை எடுத்தது.
குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் இவர்களை பிரிக்க முகமது ஷமி, ஜோசப், பெர்குசன், ரஷீத்கான் ஆகியோரை மாறி, மாறிப் பயன்படுத்தி பார்த்தார். ஆனால், எந்த பலனும் அளிக்கவில்லை. சிறப்பாக ஆடி வந்த ஷிகர்தவான் 38 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரைசதம் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த பனுகாவும் அதிரடி காட்டினார். நன்றாக ஆடிய பனுகா 28 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
இதையடுத்து, ஷிகர் தவானுடன் அதிரடி வீரர் லிவிங்ஸ்டன ஜோடி சேர்ந்தார். பஞ்சாபின் வெற்றிக்கு 48 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 13வது ஓவரில் பஞ்சாப் 100 ரன்களை கடந்தது. 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. இதனால், 30 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது.
முகமது ஷமி வீசிய 16வது ஓவரில் லிவிங்ஸ்டன் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி ஆட்டத்தை பஞ்சாப் சுமூகமாக முடித்து வைத்தார். விங்ஸ்டன் அடித்த ஒரு சிக்ஸ் 117 மீட்டர் தொலைவிற்கு சென்றது. இந்த ஐ.பி.எல். தொடரின் நீண்ட தூர சிக்ஸ் இதுவே ஆகும். முகமது ஷமியின் அந்த ஓவரில் மட்டும் 28 ரன்களை லிவிங்ஸ்டன் விளாசினார். இதனால், பஞ்சாப் அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் 53 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 62 ரன்களுடனும், லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 30 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார். இந்த வெற்றி மூலம் பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணிக்கு இது 2வது தோல்வி ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்