SRH vs RR IPL 2024: டாஸ் வென்ற ஹைதராபாத்..பேட்டிங் தேர்வு; பந்து வீச்சில் மிரட்டுமா ராஜஸ்தான்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் சீசன் 17:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 49 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் - ஹைதராபாத் மோதல்:
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்விகண்டு, 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக ராஜஸ்தான் இருக்கும்.
ஹைதராபாத் அணியோ 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், நடப்பு தொடரில் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் ஹைதராபாத் அணி இன்று களமிறங்குகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது ஹைதராபாத் அணிக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. அதோடு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென், மார்க்ரம் என பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஃபார்மில் உள்ளனர். அதேநேரம், கடைசி இரண்டு போட்டிகளிலும் மேற்குறிப்பிடப்பட்ட வீரர்கள் ரன்களை குவிக்க தவறினர். அதோடு, சேஸிங் என்பது அந்த அணிக்கு பிரச்னையாகவே தொடர்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினாலும், மறுபுறம் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் அதிகப்படியான ரன்களை விட்டுக் கொடுத்து வருகின்றனர். மறுபுறம் ராஜஸ்தான் அணியில் பட்லர், ஜெய்ஷ்வால், சாம்சன் மற்றும் ரியன் பராக் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் போல்ட், சந்திப் சர்மா, சாஹல் மற்றும் அஷ்வின் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 18 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 9 முறை வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 102 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 217 ரன்களையும், குறைந்தபட்சமாக 127 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
இந்நிலைல் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் தங்களது அதிரடியான ஆட்டத்தை பேட்டிங்கில் ஹைதராபாத் அணி காட்டுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.