![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி.
![RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி! rr-vs-dc -rajasthan-royals-wons delhi capitals by 12 runs Riyan Parag Avesh Khan RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/8f1fe26ba535ca0e5e7ceea1f017c0bd1711648949241732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராஜஸ்தான் vs டெல்லி:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில் இன்று (மார்ச் 28) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடிய 9 வது லீக் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார்கள். இருவரும் எதிர்பார்த்த தொடக்கத்தை கொடுக்கவில்லை. 7 பந்துகள் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது களத்தில் நின்ற ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். அந்த வகையில் சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். சில நிமிடங்களிலேயே ஜோஸ் பட்லரும் நடையைக்கட்டினார்.
பின்னர் ரியான் பாரக் உடன் ஜோடி சேர்ந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். களம் இறங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்க விட்டார் அஸ்வின். இவரது அதிரடி சிக்ஸர்களால் மளமளவென ரன்கள் உயர்ந்தது. அப்போது அக்ஸர் படேல் வீசிய பந்து விக்கெட்டை பறிகொடுத்தார் அஸ்வின். அதன்படி, 19 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 29 ரன்களை குவித்தார்.
ரியான் பராக் அதிரடி:
இதனிடையே ஐ.பி.எல் போட்டியில் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் ரியான் பராக். 34 பந்துகளில் அரைசதம் விளாசினார். அப்போது துருவ் ஜூரெல் விக்கெட்டை பறிகொடுத்தார். ரியான் பராக் கடைசி வரை களத்தில் நின்று 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 84 ரன்கள் குவித்தார். இவ்வாறாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் குவித்தது.
பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது டெல்லி அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் களம் இறங்கினார்கள். இதில் 12 பந்துகளில் 5 பவுண்டரிகள் விளாசிய மிட்செல் மார்ஸ் 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவருக்கு அடுத்ததாக களம் இறங்கிய டெல்லி அணியின் இளம் வீரர் ரிக்கி புய் டக் 2 பந்துகள் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் நந்த்ரே பர்கர் தான் வீசிய 4 வது ஓவரில் எடுத்தார். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் மொத்தம் 34 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 49 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர். அப்போது ரிஷப் பண்ட் சாஹல் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி மொத்தம் 26 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 28 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 ரன்கள் எடுத்து இருந்தாலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறாக டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் சீசன் 17ல் இரண்டாவது வெற்றியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)