(Source: ECI/ABP News/ABP Majha)
RCB vs KKR: கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுவாரா விராட்? டாஸ் வென்று பந்து வீச முடிவு..!
IPL 2023, Match 36, RCB vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே விளையாடி வரும் இந்த இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 17 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி நான்கு போட்டிகளில் மூன்றில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 10 போட்டிகளில் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், சின்னசாமி மைதானத்தில் இதுவரை 91 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு அணி நிலவரம்:
நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கேப்டன் டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தலான ஃபார்மில் உள்ளனர். ஆனால், அவர்களை தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்காதது பெங்களூருவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதேபோன்று பந்துவீச்சிலும் முகமது சிராஜ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வர, ஹர்ஷல் படேல் உள்ளிட்டோர் தொடர்ந்து அதிக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, இன்றைய போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் நுழைய முனைப்பு காட்டி வருகிறது.
கொல்கத்தா அணி நிலவரம்:
கொல்கத்தா அணி இதுவரை நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி, இரண்டில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. கேப்டன் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட எந்தவொரு பேட்ஸ்மேனும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதும், நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதும் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நடப்பு தொடரில் இரு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.