இதுதான் தோனி - கோலி சேர்ந்து விளையாடும் கடைசி போட்டி? ஷாக்கில் ரசிகர்கள்
RCB vs CSK IPL 2025: பெங்களூரு சின்னசாமியில் நாளை நடக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியே கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான தோனி - கோலி இருவரும் இணைந்து விளையாடும் கடைசி போட்டி என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில், மும்பை, ஆர்சிபி அணிகள் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லப்போகும் மற்ற அணிகள் யார்? என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
தோனி - கோலி:
இந்த நிலையில் இந்த தொடரில் முதல் அணியாக தொடரை விட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. தொடக்க காலத்தில் அனைத்து அணிகளின் மீதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஐபிஎல் தொடர் கடந்த சில ஆண்டுகளாகவே தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய 3 பேரைச் சுற்றியே சுழன்று வருகிறது.
இதற்கு காரணம் இந்திய அணியின் ஜாம்பவன்களாக கொடி கட்டி பறந்த தோனியும், பறக்கும் விராட் கோலி மற்றும் ரோகித்தின் ரசிகர்கள் பட்டாளமே ஆகும். இதனால், ஒவ்வொரு சீசனிலும் ஆர்சிபி - சென்னை, சென்னை - மும்பை. ஆர்சிபி - மும்பை அணிகள் மோதும் போது பெரும் எதிர்பார்ப்பு உண்டாகும்.
கடைசி போட்டியா?
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் மோசமான தோல்வி, வயது உள்ளிட்ட பல காரணங்களால் 43 வயதான தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றால் விராட் கோலி - தோனி இணைந்து விளையாடும் கடைசி ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கும் போட்டியே ஆகும்.
ஐபிஎல் தொடரின் மன்னர்களாக உலா வரும் இவர்கள் இருவரும் விளையாடும் போட்டிகளில் இவர்களை காண்பதற்காக ரசிகர்கள் பட்டாளம் குவிவது வழக்கம். இவர்கள் இருவரும் எதிரெதிர் அணியில் ஆடும்போது இவர்களை காண்பதற்கு அதிகளவு ரசிகர்கள் குவிவார்கள்.
படுஜோராக நடந்த டிக்கெட் விற்பனை:
தோனி - விராட் கோலி இணைந்து விளையாடும் கடைசி போட்டி இது என்று ஏற்கனவே தகவல்கள் பரவிவருவதால் நாளைய போட்டி காண டிக்கெட் விற்பனை ஏற்கனவே ஜோராக நடைபெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ஆர்சிபி அணிகள் இதுவரை 34 போட்டிகளில் மோதியுள்ளன. இந்த போட்டிகள் அனைத்திலும் இருவரும் இணைந்து விளையாடியுள்ளனர்.
பொதுவாக ஐபிஎல் தொடரில் சென்னை அணி பெங்களூர் அணிக்கு எதிராக அதிகளவில் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தாலும் இந்த தொடரில் சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி சிஎஸ்கே-வை வீழ்த்தி வரலாறு படைத்தது. தோனியும் கோலியும் இணைந்து விளையாடும் கடைசி போட்டி நாளையே என்றானால் நிச்சயம் இந்த போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவமான போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




















