Jadeja on CSK win: “சந்தேகம்னா தோனிகிட்டதான் போவேன்” - முதல் வெற்றியை மனைவிக்கு சமர்ப்பணம் செய்த ஜடேஜா!
ஜடேஜா வீசிய 16 வது ஓவரில் ஹசரங்கா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு, அடுத்த பந்தே அவுட் ஆக, பின்னால் வந்த ஆகாஷ் தீப்பும் அதே ஓவரில் நடையைக்கட்டினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவித்து வந்தது. இதனால், ரசிகர்களின் விமர்சனத்திற்கு கேப்டன் ஜடேஜா ஆளானார். இந்நிலையில், டாக்டர் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நேற்று பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை வென்று இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ருதுராஜ், மொயின் அலி அவுட் ஆகி சென்ற பிறகு ஷிவம் டுபே, உத்தப்பா ஆகியோர் ருத்ரதாண்டவம் எடுத்து அதிரடியாக ஆடினர். இறுதியில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளிசி எட்டு ரன்களுடனும், கோலி 1 ரன்களிலும் நடையைக்கட்டினர். தொடர்ந்து, அனுஜ் ராவத் 12 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஒரே ஓவரில் பெங்களூருவின் வெற்றியை தட்டிப்பறித்த ஜடேஜா:
ஜடேஜா வீசிய 16 வது ஓவரில் ஹசரங்கா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு, அடுத்த பந்தே அவுட் ஆக, பின்னால் வந்த ஆகாஷ் தீப்பும் அதே ஓவரில் நடையைக்கட்டினார். ஒரு கட்டத்தில் பெங்களூர் அணிக்கு 24 பந்துகளில் 71 ரன்கள் தேவையாக இருந்தது.
Skipper's Threet! ⚔️🔥#CSKvRCB #Yellove #WhistlePodu 🦁💛 @imjadeja pic.twitter.com/tiC4iOrewZ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
தொடர்ந்து அவர் வீசிய 18வது ஓவரில், முதல் இரண்டு பந்துகள் வைட் விழ, அடுத்த பந்து அடித்து தினேஷ் கார்த்திக் ரன் எடுக்கவில்லை. அதற்கு அடுத்த பந்தை தூக்கிய தினேஷ் கார்த்திக் (14 பந்து 34 ரன்கள்) ஜடேஜாவிடம் கேட்சானார். பெங்களூர் அணி இந்த நிலைமையில் 9 விக்கெட்களை இழந்து இருந்தது.
முதல் வெற்றி மனைவிக்கு சமர்ப்பணம்:
கடைசி இரண்டு ஓவர்கள் ஜோர்டன் மற்றும் பிராவோ சிறப்பாக பந்துவீச, சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2022 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ஜடேஜா, இந்த வெற்றியை தனது மனைவிக்கு டெடிகேட் செய்திருக்கிறார். ”முதல் வெற்றி எப்போதும் ஸ்பெஷல். அதனால் இந்த வெற்றியை எனது மனைவிக்கும், அணிக்கும் சமர்ப்பிக்கிறேன். அணி நிர்வாகம் என்மீது அழுத்தம் வைக்கவில்லை. எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகின்றனர். இன்னும் அந்த கேப்டன்சி நுணுக்கங்களை கற்றுத் தேறவில்லை. சந்தேகம் இருப்பின் தோனியிடம் கேட்டுக்கொள்வேன்” என ஜடேஜா தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்