PBKS Vs DC, IPL 2024: சொதப்பிய டாப்-ஆர்டர் - இறுதியில் போராடிய டெல்லி - பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு
PBKS Vs DC, IPL 2024: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
PBKS Vs DC, IPL 2024: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி சார்பில் ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டெல்லி - பஞ்சாப் மோதல்:
இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ்மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சொதப்பிய டெல்லி டாப்-ஆர்டர்:
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் தலா 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி, 12 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சற்றே நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 21 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களில் கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்களிலும், ரிக்கி புய் வெறும் 3 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
நம்பிக்கை தந்த சாய் ஹோப்:
ஒருமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், சாய் ஹோப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் டெல்லி அணி ஸ்கோர் மளமளவென எகிறியது. ஆனால், 25 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து இருந்தபோது, ஹோப் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த ஸ்டப்சும் வெறும் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதன் மூலம், டெல்லி அணி 128 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
டெல்லி அணிக்கான இலக்கு:
இறுதியில் சற்றே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் 21 ரன்களில் ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். சுமித் குமார் 2 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய, போரல் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களை விளாசி அதகளப்படுத்தினர். மொத்தத்தில் 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 31 ரன்களை விளாசி டெல்லி அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். இருப்பினும் கடைசி பந்தில் ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை சேர்த்தது.
பஞ்சாப் அணி சார்பில் ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும், ஹர்ஷல் படேல் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் மட்டும், 25 ரன்களை டெல்லி அணி சேர்த்தது. இதையடுத்து, பஞ்சாப் அணி 175 ரன்கள் என்ற இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.