"அம்மா அழுதுட்டாங்க…", ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு ஏலம் சென்ற ஹாரி ப்ரூக்!
"நான் என் அம்மா மற்றும் பாட்டியுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், SRH என்னைத் தேர்ந்தெடுத்தபோது அவர்கள் இருவரும் அழுது கொண்டிருந்தார்கள்",என்று புரூக் கூறினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டபோது ஹாரி புரூக் தனது குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். முதன்முறையாக ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்ற அவர், வரும் சீசனில் SRH அணிக்காக களம் இறங்கும் நிலையில் ஏலத்தில் பெரும் தொகைக்கு போனதைக் கண்டு தனது அம்மா கண் கலங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹாரி ப்ரூக்
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆல் ரவுண்டர்கள் பெரும் தொகைகளை அள்ளிச்சென்ற நிலையில் ஒரு பிராப்பர் பேட்ஸ்மேனாக அதிக தொகைக்கு ஏலம் சென்றுள்ளார் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக். ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்ற நிலையில் சாம் கர்ரானை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஹாரி ப்ரூக்கை ஐபிஎல் 2023 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ₹13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணியால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். மேலும் ஆல்-ரவுண்டர்களான சாம் குர்ரன் (₹ 18.25cr) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (₹ 16.25cr) ஆகியோருக்குப் பிறகு ஒரு இங்கிலாந்து வீரராக மூன்றாவது அதிகபட்ச தொகையை பெற்றுள்ளார்.
எமோஷன் ஆன ப்ரூக்
ஹாரி ப்ரூக் சன்ரைசர்ஸ் அணிக்காக ஏலம் சென்ற போது அவர் அவரது குடும்பத்தினருடன் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்துள்ளார். 13.25 கோடிக்கு ஏலம் சென்று ஐதராபாத் அணிக்காக ஆட இருக்கும் அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், "சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, நான் என் அம்மா மற்றும் பாட்டியுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், SRH என்னைத் தேர்ந்தெடுத்தபோது அவர்கள் இருவரும் அழுது கொண்டிருந்தார்கள்" ,என்று புரூக் கூறினார்.
ஏலம் சென்ற விதம்
புரூக்கின் அடிப்படை விலை ரூ.1.50 கோடியாக இருந்தது. புரூக்கிற்கான ஏலத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்தான் தொடங்கின. ஆனால் RCB ரூ. 5 கோடியை எட்டியபோது ஏலத்தில் இருந்து வெளியேறியது. அப்போதுதான் SRH உள்ளே காலடி எடுத்து வைத்தது. ராஜஸ்தானுடன் கடும் போட்டியிட்ட ஹைதராபாத் இறுதியில் அவரை சாதனை விலை கொடுத்து ஈர்த்தது.
ஹாரி புரூக் யார்?
23 வயதான ஹாரி புரூக் வலது கை பேட்ஸ்மேன் ஆவார், அவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 20 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ப்ரூக் டெஸ்ட் போட்டி வடிவத்தில் சராசரியாக 80 வைத்துள்ளார். மேலும் T20Iகளில் 26.57 சராசரியுடன் ஸ்டிரைக் ரேட் 137-க்கு மேல் வைத்து உள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில்தான் புரூக் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்தார். அவர் டி20 போட்டி வடிவத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட அவரை பலர் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசினர். வருங்காலத்தில் பெரும் ஜாம்பவானாக உருவெடுப்பார் என்று அவர் பற்றி பேசப்படுகிறது.