Dhoni IPL CSK: போட்றா விசில, எட்றா மஞ்ச ஜெர்சிய..! ஐபிஎல் 2025-ல் தோனி சிஎஸ்கேவில் விளையாடுவது உறுதி - புது ரூல்ஸ்
Dhoni IPL CSK: ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய விதிகளின் மூலம், தோனி அடுத்த சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
Dhoni IPL CSK: சென்னை அணிக்கு சாதகமாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய விதி, என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய விதிகள்:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலத்திற்கு முன், 10 அணி நிர்வாகங்களும் தலா ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் பொதுக்குழு உறுப்பினர்கள், பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அந்த 6 தக்கவைப்பு வீரர்களில் ஒருவர், அந்கேப்ட் பிளேயராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, ஆறு தக்கவைப்பு வீரர்களில் குறைந்தபட்சம் ஒருவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத வீரராக இருக்க வேண்டும். மீதமுள்ள ஐந்து பேர் இந்தியர்களாகவோ அல்லது வெளிநாட்டு வீரர்களாகவோ இருக்கலாம்.
தக்கவைப்பு வீரர்களுக்கான ஊதியம் எவ்வளவு?
நேரடி தக்கவைப்பு வழி அல்லது தக்கவைப்பு மற்றும் RTM விருப்பங்களின் கலவையின் மூலம் ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்களை வைத்துக் கொள்ளலாம். ஒரு அணி ஐந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், முதல் மூன்று தக்கவைப்புகளுக்கு முறையே ரூ. 18 கோடி, ரூ. 14 கோடி மற்றும் ரூ. 11 கோடி செலவாகும். இந்த தொகை ஏலத்திற்காக மொத்தமாக அனுமதிக்கப்பட்ட ரூ.120 கோடியிலிருந்து கழிக்கப்படும். கடைசி இரண்டு தேர்வுகளுக்காக, உரிமையாளர்கள் ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடியை இழக்க நேரிடும். ஐந்து வீரர்களைத் தக்கவைத்தால், ஒரு அணி ஏலத்தின் போது ரூ.45 கோடியை மட்டுமே கைவசம் வைத்திருக்கும். அதோடு அதிகபட்சமாக ரண்டு அன்கேப்ட் பிளேயர்கள மட்டுமே அணி நிர்வாகங்களால் தக்க வைக்கப்படும். அவர்களுக்கான ஊதியமாக ரூ.4 கோடி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணிக்கு சாதகமான புது ரூல்ஸ்:
ஐபிஎல் 2008 இல் நிறுவிய ஒரு விதியை மீண்டும் கொண்டு வர ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள், அன்-கேப்ட் பிளேயராக ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இந்த விதி முந்தைய காலத்த்தில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, 2021 இல் நீக்கப்பட்டது. இருப்பினும், அணி உரிமையாளர்களின் நீண்ட விவாதத்தை தொடர்ந்து, அந்த விதி மீண்டும் அமலுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியில் தோனி:
புதிய விதியின் அடிப்படையில், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விரும்பினால், அனியின் முன்னாள் கேப்டன் தோனியை ஒரு அன்-கேப்ட் வீரராக தக்க வைத்துக் கொள்ளலாம். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 12 கோடிக்கு சிஎஸ்கேயின் இரண்டாவது தக்கவைப்பு வீரராக தோனி இருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக உள்ள தோனி, முன்பை போன்று பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும் அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக, அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனி சென்னை அணிக்காக அன்-கேப்ட் வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 43 வயதை எட்டிய தோனி, ஆகஸ்ட் 2020 இல் சர்வதேச ஓய்வுக்குப் பிறகு ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று தோனி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்துள்ளார். அதேநேரம், சென்னை அணியால் அன்-கேப்ட் பிளேயராக தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரது சம்பளம் ரூ.4 கோடியாக மட்டுமே இருக்கும்.