Most 200+ score in IPL: ஐபிஎல்-லில் அதிக முறை 200 ரன்கள்.. அடுத்தடுத்து சாதனையை குவிக்கும் சிஎஸ்கே.. முழு பட்டியல் விவரம்!
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உலகின் சிறந்த கிரிக்கெட் லீக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2008 ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து அதிரடியும் சரவெடியும் மாறி மாறி பொழிக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மொத்தமாக 22 முறை ஒரு இன்னிங்ஸில் 200 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டது. இது 2008 ம் ஆண்டுக்கு பிறகு எந்த சீசனிலும் இத்தனை முறை பதிவாகவில்லை.
இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. லக்னோ உடனான போட்டியில் 217 ரன் எடுத்த நிலையில் இதுவரை 24 முறை 200 ரன்னுக்கு மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக 200 ரன்னுக்கு மேல் 22 முறை குவித்து பெங்களூரு அணி 2வது இடத்தில் உள்ளது. அதிக முறை 200 எடுத்த அணியின் விவரங்களை விவரங்களுடன் பார்க்கலாம்..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி, மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை 11 முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப்பெற்று 4 முறை கோப்பையும் வென்றுள்ளது. இப்படியான ஒரு சாதனை ஒருபுறம் இருக்க, மறுபுறம் சென்னை அணி அதிகபட்சமாக இதுவரை 24 முறை 200 ரன்கள் எடுத்துள்ளது.
எண் | குழு | 200+ மதிப்பெண்களின் எண்ணிக்கை |
---|---|---|
1 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 24 |
2 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 22 |
3 | பஞ்சாப் கிங்ஸ் | 17 |
4 | மும்பை இந்தியன்ஸ் | 16 |
5 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 15 |
சென்னை அணியின் அதிகபட்ச ரன்கள் பட்டியல்:
246 vs RR (2010)
கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 246 ரன்கள் குவித்தது. இதுவே இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.
240 vs KxiP (2008)
2008 தொடக்க சீசனில் சென்னை அணி கிங்ஸ் xi பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏப்ரல் 19ம் தேதி மோதியது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் குவித்தது. இது சென்னை அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
223 vs SRH (2013)
கடந்த 2013ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மே 8ம் தேதி சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இது சென்னை அணியின் மூன்றாவது அதிகபட்ச ரன் எண்ணிக்கை ஆகும்.
222 vs DC (2012)
சென்னை அணியின் நான்காவது அதிகபட்ச ஸ்கோர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2012ம் ஆண்டு பதிவானது. 25 ம் தேதி மே மாதம் நடந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
220 vs KKR (2021)
கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. அப்போது சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. இது சிஎஸ்கேவின் 5வது அதிகபட்ச ரன்னாகும்.
218 vs MI (2021)
சென்னை அணிக்கு எப்போதும் ஒரு தலைவலியாக இருக்கும் அணி மும்பை அணி. கடந்த 2021ம் ஆண்டு மே 1ம் தேதி மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. இது சென்னை அணியின் 6வது அதிகபட்ச ஸ்கோர்.
217 vs LSG (2023)
நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 217 ரன்கள் குவித்து அசத்தியது. இதுதான் சென்னை அணி 7வது அதிகபட்ச ஸ்கோர்.
ஒட்டுமொத்தமாக அதிகபட்ச ரன் எடுத்த அணி எது..?
கடந்த 2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ரன் எண்ணிக்கை. இந்த போட்டியில், கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 17 சிக்ஸர்கள் அடித்து 175 ரன்கள் குவித்தார்.
இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரிலும் பெங்களூர் அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது.