LSG vs MI Match Highlights: ஆப்பு வைத்த மும்பை.. 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது லக்னோ அணி..!
LSG vs MI IPL 2023 Eliminator: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது.
LSG vs MI IPL 2023 Eliminator: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது.
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்
16வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை கிட்டதட்ட ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற லீக் போட்டிகள் விறுவிறுப்பாக சென்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த சுற்றில் இரண்டு தகுதிச்சுற்று போட்டிகள், ஒரு வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) போட்டிகள் நடைபெறும்.
அந்த வகையில் நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டி நடந்தது. இதில் குஜராத் அணியை சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக ஃபைனலுக்கு சென்றது. தோற்ற குஜராத் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடம் 2வது தகுதிச்சுற்று போட்டியில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதும்.
லக்னோ - மும்பை அணிகள் மோதல்
இப்படியான நிலையில், 2வது தகுச்சுற்றுக்கு செல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ - மும்பை அணிகள் இன்று மோதியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் ரோகித் சர்மா 11, இஷான் கிஷன் 15, சூர்யகுமார் யாதவ் 33, கேமரூன் க்ரீன் 41, திலக் வர்மா 26 ,நெஹல் வதேரா 23 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. லக்னோ அணி தரப்பில் அதிகப்பட்சமாக நவீன் உல் -ஹக் 4 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மும்பை அணி வெற்றி
இதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் கண்டது. ஆரம்பம் முதலே முடிந்தவரை கிடைக்கும் கேப்பில் எல்லாம் ரன் குவிக்க வேண்டும் என நினைத்த அந்த அணிக்கு ஆப்பு காத்திருந்தது. அந்த அணியில் கைல் மேயர்ஸ் 18, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40, தீபக் ஹீடா 15 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாயினர். இதனால் 20 ஓவர்களில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை அணி தரப்பிலான பந்துவீச்சில், ஆகாஷ் மாத்வெல் 3.3 ஓவர்கள் பந்துவீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிப் பெற்றது. அந்த அணி மே 26 ஆம் தேதி குஜராத் அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும். அதேசமயம் மும்பையிடம் தோற்ற லக்னோ அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.