LSG vs GT IPL 2023: முதல் முறையாக தம்பிக்கு எதிரான அண்ணன்.. யாருக்கு வெற்றி? பலப்பரீட்சை நடத்தும் குஜராத் - லக்னோ!
லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினாலும், லக்னோ அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 51வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ரஷித்கான் மற்றும் நூர் அஹமத்தின் சிறப்பான பந்துவீச்சாள் குஜராத் அணி வெற்றிபெற்றது.
அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை கடைசியாக நடந்த நான்கு போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றாலும், புள்ளிகள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினாலும், லக்னோ அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துவிட்டு சென்றுள்ளார். லக்னோ அணிக்கு க்ருனல் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முதல் முறையாக தம்பி ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக அண்ணன் க்ருனல் பாண்டியா கேப்டனாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
பிட்ச் அறிக்கை:
அகமதாபாத்தில் உள்ள ஆடுகளம் கடந்த சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 179 ஆக உள்ளது. அதேபோல், டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது கிட்டதட்ட 75 சதவீத விக்கெட்கள் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர். முந்தைய போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் எட்டு விக்கெட்கள் வீழ்ந்ததை தொடர்ந்து, பவர்பிளேவில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுப்பது வெற்றிகான வாய்ப்பாக அமையும். ஏனெனில், கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது.
நிக்கோலஸ் பூரன்:
லக்னோ அணிக்காக விளையாடும் நிக்கோலஸ் பூரன் மிடில் ஆர்டரில் வலுவான அடித்தளம் அமைத்து தருகிறார். 10 போட்டிகளில் 164.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 245 ரன்கள் எடுத்துள்ளார்.
சுப்மன் கில்:
இந்த சீசனில் 10 போட்டிகளில் 375 ரன்கள் குவித்த சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிகபட்ச ரன் குவித்தவர் ஆவார். அவர் மூன்று அரைசதங்களுடன் 37.50 சராசரியை பெற்றுள்ளார்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா, கரண் ஷர்மா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனல் பாண்டியா (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மொஹ்சின் கான் மற்றும் கிருஷ்ணப்ப கவுதம்.
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், நூர் அகமது, மோகித் சர்மா மற்றும் முகமது ஷமி.