Kapil Dev On Arjun : சச்சின் வேறு..அவர் மகன் அர்ஜூன் வேறு.. ஒப்பீடு தேவையில்லை - அதிரடியாக பேசிய கபில்தேவ்!
சச்சின் டெண்டுல்கருடன் அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரை ஒப்பிட வேண்டாம் என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றிலே தொடரை விட்டு வெளியேறியது. இந்த சீசனில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.
இந்த நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் குறித்து கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ அனைவரும் அர்ஜூன் டெண்டுல்கர் பற்றியே ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காகவே. அர்ஜூனை அவரது இயல்பான விளையாட்டை விளையாட விடுங்கள். அர்ஜூன் டெண்டுல்கரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம். டான் பிராட்மேனின் மகன்கூட கடும் அழுத்தம் காரணமாக தனது தந்தை பெயரை சேர்க்காமலே விளையாடினார். அவரிடம் அவரது தந்தை போலவே பலரும் எதிர்பார்த்ததால் அவர் அப்படி செய்தார்.
அர்ஜூன் மீது அழுத்த்ததை திணிக்க வேண்டாம். அவர் மிகவும் சிறிய வயது வாலிபன். நான் அர்ஜூனுக்கு சொல்வது ஒன்றுதான். கிரிக்கெட்டை ரசித்து விளையாடுங்கள். அர்ஜூன் டெண்டுல்கர் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை அப்படி நிரூபிக்க நினைத்தால் உங்கள் தந்தை செய்ததில் 50 சதவீதம் செய்தாலே போதும். அதைவிட பெரிது ஏதுமில்லை. டெண்டுல்கர் என்ற பெயர் காரணமாகவே நமது எதிர்பார்ப்பு மிகவும் அதிகரிக்கிறது. ஏனென்றால் சச்சின் தலைசிறந்தவர். “
இவ்வாறு அவர் பேசினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2 சீசனாக விளையாடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு போட்டியில் கூட இறக்கப்படாதது சச்சினின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனை அளித்துள்ளது. இந்த சீசனில் மும்பை அணியில் திலக் வர்மா, ஹிரித்திக் என மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறிய பிறகு எஞ்சிய போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் விளையாடவில்லை.
இருப்பினும், வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அவர் அற்புதமாக வீசிய வீடியோக்கள் மட்டும் வெளியிடப்பட்டது. அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த சீசனில் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சீசனில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ப்ளேயிங் லெவனில் ஆடுவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்