IPL CSK Retention: டிசம்பரில் ஐபிஎல் ஏலம்.. சிஎஸ்கே கழற்றி விடப்போகும் வீரர்கள் லிஸ்ட் ரெடி.. முழு விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று இந்திய வீரர்களையும் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் விடுவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் 2026 ஆண்டுக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைப்பெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டெவோன் கான்வே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கழற்றிவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் ஏலம்:
ஐபிஎல் 2026க்கான ஏலம் டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த முறை, நடைப்பெறவுள்ள மினி ஏலம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், 10 அணிகளும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து நட்சத்திர வீரர்களை விடுவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
யார் யார் நீக்கம்?
தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று இந்திய வீரர்களையும் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் விடுவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆச்சரியப்படும் விதமாக, இந்த பட்டியலில் தற்போதைய டி20 ஆல்ரவுண்டர் சாம் கரனும் இடம்பெற்றுள்ளார். சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, சாம் கரன் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் அடங்குவர்.
தோனி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.
ஐபிஎல் 2026 இல் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வு பெற விரும்புகிறார் என்பதை தோனி முடிவு செய்வார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. அறிக்கைகள் நம்பப்பட வேண்டுமானால், இந்த சீசனிலும் தோனி விளையாடுவதைக் காணலாம்.
ஐபிஎல் 2025 இல் சொதப்பிய சிஎஸ்கே
ஐபிஎல் 2025 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. அந்த அணி 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வியடைந்தது. ஐபிஎல் 2025 இன் தொடக்க ஆட்டங்களில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார். பின்னர் எம்எஸ் தோனி அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வரும் சீசனிலும் கெய்க்வாட் சென்னை அணியை தொடர்ந்து வழிநடத்துவாரா அல்லது அந்த அணி வேறு வீரரிடம் ஆட்சியை ஒப்படைக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.





















