Ben Stokes : ஸ்டோக்ஸை வாங்குங்கனு தோனி மெசேஜ் பண்ணாரா? சிஎஸ்கே சிஇஓ சுவாரஸ்ய பதில்..!
மற்ற அணிகளை போல் வீரர்களை வாங்கி குவிக்காமல் நல்ல வீரர்களை மட்டுமே சென்னை அணி குறி வைக்கும். முதல் ஏலத்தில் தோனியையும் இரண்டாவது ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளின்டாப்பையும் சென்னை அணி வாங்கியது.
கேரளாவின் கொச்சியில் இன்று ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 405 வீரர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 273 பேர் இந்தியர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அனைத்து அணிகளிலும் சேர்த்து 87 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன.
மொத்தமாக 10 அணிகளும் சேர்த்து ரூபாய் 183.15 கோடியை கையிருப்பாக கொண்டு இந்த ஏலத்தை தொடங்கின. முதல் வீரராக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அடிப்படை ஏலத்தொகையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்தாண்டு வரை ஐதராபாத் அணிக்கு விளையாடி வந்த இவர், ரூ.14 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இருந்தார்.
அதைதொடர்ந்து, அண்மையில் ஐதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வில்லியம்சன், அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணியால் எடுக்கப்பட்டார். அதைதொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுப்பதற்கு பல அணிகளும் தீவிரம் காட்டின. இறுதியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை, ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஏல வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 18.50 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. அதேபோல, கேமரன் கிரீனை 17.50 கோடி ரூபாய்க்கு மும்பை அணியும் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை அணியும் வாங்கியுள்ளது.
ஏலத்தை பொறுத்தவரை, மற்ற அணிகளை போல் வீரர்களை வாங்கி குவிக்காமல் நல்ல வீரர்களை மட்டுமே சென்னை அணி குறி வைக்கும். முதல் ஏலத்தில் தோனியையும் இரண்டாவது ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளின்டாப்பையும் சென்னை அணி வாங்கியது. அதேபோல, ஜடேஜா, பிராவோ போன்ற நல்ல வீரர்களையும் சென்னை அணி வாங்கி இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகவே, இன்று பென் ஸ்டோக்ஸை குறிவைத்து சென்னை அணி காய் நகர்த்தியது. முதலில், சாம் கரனுக்காகவே சென்னை அணி ஏலத்தில் குதித்தது. ஆனால், பஞ்சாப் அணி விடாபிடியாக இருந்ததால் சாம் கரனை சென்னை அணியால் வாங்க முடியவில்லை.
ஸ்டோக்ஸை வாங்கிய பிறகு, சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாத், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், ஸ்டோக்ஸை வாங்குமாறு தோனி மெசேஜ் செய்தாரா என அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், "ஏலத்தில் ஸ்டோக்ஸை வாங்குமாறு தோனியிடம் இருந்து மெசேஜ் எதுவும் வரவில்லை. ஆனால், ஒரு பெரிய ஆல்-ரவுண்டரை வாங்குவதற்காக தயாராக இருந்தோம். சென்னை அணிக்கு பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதில் எங்களுக்கு மிகழ்ச்சி" என்றார்.
கடந்தாண்டின் ரன்னர் அப்பான ராஜஸ்தான் அணி, ஸ்டோக்ஸை முன்னதாக விடுவித்தது. கடந்தாண்டு, ஐபிஎல் போட்டியை அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.