தொடக்கத்தில் எகிறிய ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி.. இறுதியில் கம்பேக் கொடுத்த பஞ்சாப்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது பஞ்சாப் அணி. பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இன்று நடந்த முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
பஞ்சாப்-க்கு டஃப் கொடுத்த ராஜஸ்தான்:
பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான பிரியான்ஷ் ஆர்யா, 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மிட்செல் ஓவன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து, களத்தில் இறங்கிய நேஹல் வதேரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தார். 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், 25 பந்துகளில் 50 ரன்களும் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர். ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இருப்பினும், துருவ் ஜுரல், ஒரு முனையில் சிறப்பாக ஆடி பஞ்சாப் அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.
பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி:
மார்கோ ஜான்சன் வீசிய பந்தில் அவர் ஆட்டம் இழக்க பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு ராஜஸ்தான் அணியால் 209 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது பஞ்சாப் அணி. பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
இதை தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. 5வது இடத்தில் உள்ள டெல்லி அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியுள்ளது.
அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3 அல்லது நான்காவது இடம் வரை முன்னேறக்கூடும். அதேநேரம், குஜராத் அணி வெற்றி பெற்றால், நடப்பு தொடரில் அதிகாரபூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக மாறும். புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தை உறுதி செய்யும்.



















