மிரட்டி எடுத்த வதேரா, ஷஷாங்க் சிங்.. மிரண்டு போன ராஜஸ்தான்.. இமாலய இலக்கை எட்டுமா?
ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, 17 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களம் இறங்கியது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய நாளின் முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. பிற்பகல் 3.30 மணிக்கு சவாய் மான்சிங் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
மிரட்டி எடுத்த வதேரா:
ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, 17 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களம் இறங்கியது.
ஆனால், அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான பிரியான்ஷ் ஆர்யா, 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மிட்செல் ஓவன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து, பிரப்சிம்ரன் சிங்குடன் ஜோடி சேர்ந்த நேஹல் வதேரா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ராஜஸ்தான் அணியின் பவுலர்களை பந்தாடினார். பிரப்சிம்ரன் அவுட் ஆகி வெளியேறிய பிறகும், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷஷாங்க் சிங், வதேராவுடன் இணைந்து சிறப்பாக ஆடினர். 70 ரன்கள் எடுத்திருந்தபோது, வதேரா, தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
இமாலய இலக்கை எட்டுமா ராஜஸ்தான்?
இறுதியில், ராஜஸ்தான் பவுலர்கள் வீசிய பந்தினை நாலா புறமும் சிதறடித்தார் ஷஷாங்க் சிங். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 59 ரன்களை எடுத்திருந்தார் ஷஷாங்க் சிங். ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தார். 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது ராஜஸ்தான் அணி.
பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் போட்டி, நேற்று மீண்டும் தொடங்கியது. அதன்படி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத திட்டமிடப்பட்டு இருந்தன.
ஆனால், நேற்று மாலை முதலே அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது. இரவு 10.30 மணியை கடந்தும் மழை தொடர்ந்ததால், டாஸ் கூட போடப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















