IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி சொந்த மண்ணில் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணிக்காக விராட் கோலி, படிக்கல் ஆகியோரின் அபார அரைசதம் மற்றும் கடைசி கட்டத்தில் டிம் டேவிட்டின் அதிரடியால் 205 ரன்களை எடுத்தது.
மிரட்டிய ஜெய்ஸ்வால்:
இதையடுத்து, 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ அணி களமிறங்கியது. கடின இலக்கை நோக்கி ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி இருவரும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட சூர்யவன்ஷி நிதானம் காட்டினார். ஜெய்ஸ்வால் பவுண்டரி, சிக்ஸராக விளாச அவருக்கு மறுமுனையில் சூர்யவன்ஷி சிக்ஸர் விளாசி ஒத்துழைப்பு தந்தார்.
வெற்றியுடன் ரன்ரேட் ராஜஸ்தானுக்கு முக்கியம் என்பதால் இருவரும் இணைந்து ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விளாசினர். இந்த ஜோடியை புவனேஷ்வர் பிரித்தார். அவரது பந்தில் சூர்யவன்ஷி 12 பந்துகளில் 2 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்து போல்டானார். இதையடுத்து, வந்த நிதிஷ் ராணா நிதானம் காட்ட அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் அரைசதம் அருகில் நெருங்கிய போது அவுட்டானார். அவர் 19 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஆட்டத்தை மாற்றிய குருணல்:
பின்னர், வந்த ரியான் பராக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ஆர்சிபியை அச்சுறுத்தினார். அப்போது 10வது ஓவரை வீச குருணல் பாண்ட்யாவை அழைத்தார் கேப்டன் ரஜத் படிதார். அவரது முயற்சிக்கு உடனடி பலன்கிடைத்தது. அவர் வீசிய முதல் பந்திலே கேப்டன் ரியான் பராக் அவுட்டானார். அவர் 10 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர், சுயாஷ் சர்மா, குருணல் பாண்ட்யா ஜோடி மாறி, மாறி சுழல் தாக்குதல் நடத்தினர். மறுமுனையில் நிதானமாக ஆடி அதிரடிக்கு மாற முயற்சித்த நிதிஷ் ராணாவை குருணல் பாண்ட்யா அவுட்டாக்கினார். 22 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த ராணா அவுட்டானார்.
பயமுறுத்திய ஜோரல்:
கடைசி 6 ஓவர்களில் 66 ரன்கள் ராஜஸ்தானுக்கு தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. களத்தில் இருந்த துருவ் ஜோரல் - ஹெட்மயர் மீது அழுத்தம் விழுந்தது. இரு அணியினரும் வெற்றிக்காக முழு மூச்சில் ஆட முயற்சித்தனர். துருவ் ஜோரல் அதிரடி காட்டினார். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டதால் ஆர்சிபி-யின் வெற்றி வேகப்பந்துவீச்சாளர்கள் கையில் இருந்தது.
அப்போது ஆட்டத்தின் போக்கில் ஹேசில்வுட் மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரது பந்தில் ஹெட்மயர் அவுட்டானார். அவர் 8 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்னில் அவுட்டானார். ஆனால், ஜோரல் மறுபக்கம் ராஜஸ்தானுக்காக போராடினார். புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசியதால் ஆட்டத்தில் மேலம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கடைசி 12 பந்துகளில் 18 ரன்கள் ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவைப்பட்டது.
ஆட்டத்தை மாற்றிய ஹேசில்வுட்:
19வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். மீண்டும் அவர் ஆர்சிபி அணிக்காக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதிரடி காட்டிய துருவ் ஜோரலை அவர் அவுட்டாக்கினார். அவர் 35 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்த பந்தில் ஆர்ச்சர் அவுட்டானார். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முடிவுக்கு வந்த சொந்த மண் சோகம்:
இதனால், கடைசி ஓவரில் 17 ரன்கள் ராஜஸ்தான் அணிக்குத் தேவைப்பட்டது. கடைசி ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்திலே ராஜஸ்தானின் ஷுபம் துபே அவுட்டானார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் வர, 3வது பந்தில் ஒரு ரன்னுடன் ஹசரங்கா ரன் அவுட்டாக கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க ஆர்சிபி வெற்றி உறுதியானது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் மட்டுமே எடுக்க ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் சொந்தமண்ணில் இதுவரை வெல்லவில்லை என்ற சோகத்திற்கு ஆர்சிபி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்மூலம் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்திற்கு ஆர்சிபி முன்னேறியுள்ளது.




















