IPL 2025 RCB vs DC:இன்னைக்கு சம்பவம்தான்.. வெற்றியைத் தொடரப்போவது யார்? ஆர்சிபி - டெல்லி நேருக்கு நேர்
IPL 2025 RCB vs DC: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - டெல்லி அணிகள் மோதும் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டி விவரங்களை கீழே காணலாம்.

IPL 2025 RCB vs DC: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை பலமிகுந்த அணிகளாக ஜொலித்து வரும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
டெல்லி - பெங்களூர் மோதல்:
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த தொடர் தொடங்கியது முதலே எந்த தோல்வியையுமே சந்திக்காத அணியாக டெல்லி கேபிடல்ஸ் அணி திகழ்கிறது. ஹாட்ரிக் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள டெல்லி அணி இன்றும் தனது வெற்றியைத் தொடங்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
வெற்றியைத் தொடரப் போவது யார்?
அதேசமயம், இந்த தொடரில் குஜராத் அணியுடன் மட்டும் தோல்வி கண்ட ஆர்சிபி அணி கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய முன்னாள் சாம்பியன்களை வீழ்த்தி வலுவாக உள்ளது. குஜராத் அணியுடனான தோல்விக்குப் பிறகு மும்பையுடன் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு ஆர்சிபி திரும்பியது. இதனால், இன்றும் தனது வெற்றியைத் தொடங்கும் முனைப்பில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது.
சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு உகந்த மைதானம் என்பதால் ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம். இந்த தொடரில் சொந்த மைதானத்தில் ஆடிய ஆர்சிபி அணி குஜராத் அணிக்கு எதிரான அந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. இதனால், சொந்த மைதானத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை ஆர்சிபி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பேட்டிங் பலம்:
இரு அணிகளும் சரிசம பலம் வாய்ந்த அணியாகவே கருதப்படுகிறது. டெல்லி அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ஆர்சிபி முன்னாள் கேப்டன் டுப்ளிசிஸ், கே.எல்ராகுல், ஜேக், அபிஷேக் போரல், ரிஸ்வி, ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் உள்ளனர்.
அதேபோல, ஆர்சிபி அணியிலும் பில் சால்ட், விராட் கோலி, படிக்கல், படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் உள்ளனர். கடந்த 3 போட்டிகளில் ஜொலிக்காத பில் சால்ட் மீண்டும் அதிரடி காட்டினால் இமாலய ரன்களை ஆர்சிபி எட்ட முடியும். இரு அணிகளும் பேட்டிங் படை பலம் பெரியளவில் இருப்பதாலும் இந்த மைதானம் பேட்டிங் சொர்க்கபுரி என்பதாலும் இரண்டு இன்னிங்சும் ரன்மழை இருக்கும்.
பந்துவீச்சு பலம்:
அதேபோல, பேட்டிங் சொர்க்கபுரியாக திகழும் மைதானத்தில் பந்துவீச்சை கட்டுக்கோப்பாக வீசினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக மாறும். இரு அணிகளிலும் பந்துவீச்சும் பலமாகவே உள்ளது. டெல்லி அணியைப் பொறுத்தவரையில் ஸ்டார்க், மோகித் சர்மா, முகேஷ் குமார் வேகத்திலும், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் சுழலிலும் உள்ளனர்.
ஆர்சிபியைப் பொறுத்தவரையில் வேகத்தில் புவனேஷ்வர், ஹேசில்வுட், யஷ் தயாள் உள்ளனர். சுழலில் குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா, லிவிங்ஸ்டன் உள்ளனர். இதனால், பந்துவீச்சு படையும் இரு அணிகளிலும் பலமாக இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தோல்வி யாருக்கு?
இந்த தொடரில் இதுவரை தோல்வியேச் சந்திக்காத டெல்லி அணியை வெற்றித் தொடர முனைப்பு காட்ட முயற்சிக்கும் நிலையில், டெல்லிக்கு முதல் தோல்வியை பரிசாக தர ஆர்சிபியும் முயற்சிக்கும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


















