IPL 2025: மொத்த சீனும் மாறிப்போச்சு.. எலிமினேட்டர் அபாயத்தில் குஜராத்? காப்பாத்துமா லக்னோ?
சென்னை அணியுடன் தோல்வியைத் தழுவியதால் குஜராத் அணியின் குவாலிஃபயர் கனவு கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் எலிமினேட்டர் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடர் 18வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு முன்பு வரை இருந்த நிலை தற்போது ஐபிஎல் தொடரில் இல்லை. டாப் ஆர்டர்களாக ப்ளே ஆஃப் சுற்றில் உலா வந்த அணிகள் அனைத்தும் தொடரை விட்டு வெளியேறிய அணிகளிடம் தோல்வியைத் தழுவி வருகிறது.
ப்ளே ஆஃப்க்கு சென்ற அணிகளுக்கு அடி மேல் அடி:
சன்ரைசர்ஸ் அணியிடம் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது. அதற்கு அடுத்து நேற்று நடந்த போட்டியில் தொடரை விட்டு வெளியேறிய டெல்லி அணியிடம் பஞ்சாப் சரண் அடைந்தது. இந்த நிலையில், இன்று அகமதாபாத்தில் குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்தில் சென்னை அணி அபாரமாக ஆடி வீழ்த்தியது.
இந்த போட்டியின் முடிவுகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு எந்த சாதகத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது புள்ளிகள் மாறியதுடன் ரன்ரேட்டும் சரிந்துள்ளது.
பரிதாப நிலையில் குஜராத்:
குறிப்பாக, இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருந்து வந்த குஜராத் அணி மும்பை - பஞ்சாப், ஆர்சிபி - லக்னோ அணிகள் ஆடும் போட்டி முடிவுகளைப் பொறுத்தே புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
ஏனென்றால், இந்த போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் மும்பை - பஞ்சாப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அவர்கள் முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பிடிப்பார்கள். பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு பஞ்சாப் செல்லும். மும்பை வெற்றி பெற்றாலும் 18 புள்ளிகள் பெற்று குஜராத்தை சமன் செய்யும். ஆனால், குஜராத்தை விட மும்பைக்கு ரன்ரேட் அதிகளவு இருப்பதால் அவர்கள் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எலிமினேட்டர் அபாயம்:
அதேபோல, ஆர்சிபி - லக்னோ அணியின் முடிவும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலே 19 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் ஒரு இடத்தை பிடிக்கும். ஒருவேளை மும்பை அணியும் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்து, ஆர்சிபி அணியும் லக்னோவிடம் தோற்றால் குஜராத் முதல் 2 இடத்தில் ஒரு இடத்தைப் பிடிக்கும். ப்ளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணிகள் தகுதி பெற்றுவிட்டாலும் முதல் இரண்டு இடங்களுக்குள் லீக் போட்டியை முடிக்கவே இந்த நான்கு அணிகளும் ஆர்வம் காட்டும்.
ஏனென்றால், முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் குவாலிஃபயர் போட்டியில் தோற்றாலும் மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிட்டும். ஆனால், எலிமினேட்டர் சுற்றில் ஆடும் அணிக்கு தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டியது மட்டுமே முடிவாகும்.
யாருக்கு முதல் 2 இடங்கள்?
இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத்தின் குவாலிஃபயர் கனவை இன்று சென்னை சிதைத்துள்ளது. அவர்களது எஞ்சிய குவாலிஃபயர் கனவு தற்போது லக்னோ கைவசம் உள்ளது. நாளை நடக்கும் மும்பை - பஞ்சாப் போட்டியும், நாளை மறுநாள் நடக்கும் லக்னோ - ஆர்சிபி போட்டியுமே குஜராத்தின் குவாலிஃபயர் கனவிற்கு விடை தரப்போகிறது.



















