IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 184 ரன்களை எடுத்துள்ளது.

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில், புள்ளிப் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும், 4-வது இடத்தில் உள்ள மும்பை அணியும் விளையாடி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது.
அதிரடி காட்டாத மும்பை இந்தியன்ஸ் அணி
இந்த போட்டியில், பஞ்சாப் அணி வென்றால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும், அதே சமயம், மும்பை அணி ஜெயிக்கும் பட்சத்தில், அந்த அணி 2-வது இடத்திற்கு செல்லும். இதனால், பஞ்சாப் அணி 3-வது இடத்திற்கு தள்ளப்படும். இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் ஷர்மா, நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், 6-வது ஓவரில், 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த ரிக்கல்டன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து சூர்யகுமார் களமிறங்கி சற்று அதிரடி காட்டினார். இந்நிலையில், மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ரோஹித் ஷர்மா, 10-வது ஓவரில் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த திலக் வர்மா, ஒரே ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆட வந்த வில் ஜாக்ஸ் 8 பந்துகளில் 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, 15 பந்துகளில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்து, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஆட வந்த நமன் திர் சற்று அதிரடி காட்டிய நிலையில், சூர்யகுமார் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில், 12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 20 ரன்கள் எடுத்திருந்த நமன் திர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மிட்செல் சான்ட்னர் களமிறங்கினார்.
இந்நிலையில், ஆட்டத்தின் கடைசி பந்தில், 38 பந்துகளில் 2 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். சான்ட்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது மும்பை அணி.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப், ஜேன்சன், விஜய் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
185 ரன்கள் இலக்கை எட்டி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.? பொறுத்திருந்து பார்ப்போம்.



















