MI vs PBKS: இந்த மேட்ச் தோத்தா மொத்தமும் போயிடும்! பஞ்சாப் - மும்பைக்கு ஏன் இந்த வெற்றி அவசியம்?
IPL 2025 MI vs PBKS: மும்பை - பஞ்சாப் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட போதிலும் இன்றைய போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் மிகவும் அவசியம் ஆகும்.

ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூர், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தகுதிபெற்று விட்டாலும் குவாலிஃபயரில் விளையாடப்போகும் அணி எது? எலிமினேட்டரில் ஆடப்போகும் அணி எது? என்பது இன்னும் முடிவாகவில்லை. நாளை நடக்கும் ஆர்சிபி - லக்னோ போட்டியின் முடிவைப் பொறுத்தே எந்த அணி? எந்த அணியுடன் மோதும் என்று கூற முடியும்.
குவாலிஃபயருக்கு நடக்கும் மோதல்:
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பஞ்சாப் - மும்பை அணிகள் இன்றைய போட்டியில் மோதிக்கொண்டாலும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? என்ற போட்டியாகவே மாறியுள்ளது. ஏனென்றால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு குவாலிஃபயர் 1ல் ஆடும் வாய்ப்பு கிட்டும்.
பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 19 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்குச் செல்லும். ஒருவேளை மும்பை அணி வெற்றி பெற்றால் அவர்கள் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கோ அல்லது இரண்டாவது இடத்திற்கோ செல்லும். அவ்வாறு முதலிடத்திற்கோ அல்லது இரண்டாவது இடத்திற்கோ சென்றால் குவாலிஃபயர் 1ல் ஆடும் வாய்ப்பு கிட்டும்.
ஏன் இந்த போட்டி முக்கியம்?
இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற நடக்கும் குவாலிஃபயர் 1 போட்டியில் ஆடும் அணிக்கு இருக்கும் சிறப்பு வாய்ப்பு என்னவென்றால், அந்த போட்டியில் தோற்கும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்ல இன்னொரு வாய்ப்பாக குவாலிஃபயர் 2ம் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மட்டுமே அந்த குவாலிஃபயர் 1ல் ஆடும் வாய்ப்பு கிட்டும். தோற்கும் அணிக்கு எலிமினேட்டரில் ஆடும் வாய்ப்பே கிட்டும்.
எலிமினேட்டர் போட்டியில் ஆடும் அணி தோல்வி அடைந்தால் தொடரை விட்டே வெளியேற வேண்டும். இதனால், ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றாலும் எலிமினேட்டர் சுற்றில் ஆடுவதை எந்த அணியும் விரும்பாது.
காத்திருக்கும் குஜராத்:
நேற்று நடந்த போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்று, நாளைய போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் அவர்கள் எலிமினேட்டர் சுற்றில் ஆட வேண்டும். குஜராத் குவாலிஃபயர் 1ல் ஆட ஆர்சிபி - லக்னோ முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்.
அதேசமயம், ஆர்சிபி அணியும் எலிமினேட்டர் சுற்றில் ஆட விருப்பம் காட்டாது என்பதால் அவர்களுக்கும் லக்னோ அணியுடனான போட்டி மிக மிக முக்கியமான போட்டி ஆகும். அவர்களும் வெற்றி பெற முழு முனைப்புடன் களமிறங்குவார்கள்.



















