IPL 2025 LSG vs RR: ஆவேஷ்கானிடம் அடிபணிந்த ராஜஸ்தான்.. திடீர் த்ரில்லராக லக்னோ வெற்றி! ரசிகர்களுக்கு விறுவிறுப்பு!
IPL 2025 LSG vs RR: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியை கோட்டைவிட்டது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி ராஜஸ்தான் பந்துவீச்சில் தடுமாறியது. இருப்பினும் மார்க்ரம், பதோனியின் சிறப்பான அரைசதத்தாலும், அப்துல் சமத்தின் அபார பேட்டிங்காலும் ராஜஸ்தான் அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கலக்கிய 14 வயது சிறுவன்:
இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்காக 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி - ஜெய்ஸ்வாலுடன் ஆட்டத்தை தொடங்கினார். இருவரும் இணைந்து அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். குறிப்பாக, வைபவ் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி தனது ஐபிஎல் வாழ்வைத் தொடங்கினார்.
தொடர்ந்து இருவரும் அதிரடி காட்டியதால் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் 10க்கு குறையாமல் சென்றது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை மார்க்ரம் பிரித்தார். அதிரடி காட்டிக்கொண்டிருந்த வைபவ் மார்க்ரம் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். அவர் 20 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஜெய்ஸ்வால் அசத்தல் அரைசதம்:
அதன்பின்பு, களமிறங்கிய நிதிஷ் ராணா அவுட்டானார். ஆனாலும், கேப்டன் ரியான் பராக் - ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடி காட்டியது. குறிப்பாக, தொடக்கம் முதல் அசத்தி வந்த ஜெயஸ்வால் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். சிறப்பாக ஆடிய அவர் அரைசதம் விளாசினா். ரியான் பராக்கும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச கடைசி 24 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவைப்பட்டது.
ஷர்துல் தாக்கூர், ஆவேஷ்கான், திக்வேஷ், மார்க்ரம், பிரின்ஸ் யாதவ், பிஷ்னோய் என யார் வீசியும் ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. 18 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அவுட்டானார். அவர் 52 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 74 ரன்கள் எடுத்து ஆவேஷ்கான் பந்தில் போல்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய ரியான் பராக்கும் அவுட்டானார். அவர் 26 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் ஆவேஷ் கான் பந்தில் 39 ரன்களுடன் அவுட்டானார்.
கடைசி ஓவர் த்ரில்லர்:
இதனால், கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது துருவ் ஜோரல் - ஹெட்மயர் ஜோடி சேர்ந்தனர். 19வது ஓவரில் ஹெட்மயர் 2 பவுண்டரிகளை விளாச கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் ராஜஸ்தானுக்குத் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசினார். அவரது முதல் பந்தில் ஜோரல் 1 ரன் எடுக்க 5 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 2வது பந்தில் ஹெட்மயர் 2 ரன் எடுக்க 3வது பந்தில் அவுட்டானார். இதனால், 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து, ஷுபம் துபே களமிறங்கினார். 4வது பந்து ஆவேஷ்கான் யார்க்கரால் டாட் பாலாக, 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் கிடைத்த எளிதான கேட்ச் வாய்ப்பை மில்லர் தவறவிட, கடைசி 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது.
த்ரில் வெற்றி:
ஆனால், கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே ஷுபம் துபே எடுக்க லக்னோ அணி 2 ரனகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றியை தங்கள் வசம் வைத்திருந்து ராஜஸ்தான் அணி 2 ரன்னில் ஆட்டத்தை கோட்டைவிட்டது ராஜஸ்தான் ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.