IPL 2025 DC vs LSG:மாஸா தொடங்கி புஸ்வானமா போன லக்னோ! பவுலிங்கில் மிரட்டிய டெல்லி
IPL 2025 DC vs LSG:லக்னோ அணி டெல்லி அணிக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

IPL 2025 DC vs LSG: 18வது ஐபிஎல் சீசனில் இன்று நடந்த 40வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆட்டத்தை மார்க்ரம் - மார்ஷ் தொடங்கினர்.
மாஸ் தொடக்கம்:
இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, மார்க்ரம் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இதனால், லக்னோ ரன் ரேட் நன்றாக எகிறியது. மறுமுனையில் மார்ஷ் அவருக்கு ஒத்துழைப்பு தர ரன்ரேட் 10 வீதம் சென்றது. சிறப்பாக ஆடிய மார்க்ரம் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்டார்க் தவறவிட அந்த வாய்ப்பை பயன்படுத்திய அவர் சிக்ஸர் விளாசினார். அப்போது, இந்த ஜோடியை சமீரா பிரித்தார். இதுவே ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது.
பவுலிங்கில் மிரட்டிய டெல்லி:
சமீரா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த மார்க்ரம் அவுட்டானார். அவர் 33 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடி காட்ட முயற்சித்த பூரண் போல்டானார். அவர் 5 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து போல்டாக லக்னோ வேகம் அதன்பின்பு குறைந்தது.
அடுத்து வந்த அப்துல் சமத் 2 ரன்னில் அவுட்டாக, தொடக்கம் முதல் அதிரடி காட்டி வந்த மார்ஷ் 45 ரன்களில் முகேஷ்குமார் பந்தில் போல்டானார். அவர் 3 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசியிருந்தார். பின்னர், டேவிட் மில்லர் - பதோனி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆட முயற்சித்தது. குறிப்பாக, ரன்ரேட் சரிந்த பிறகு பதோனி அதிரடி காட்ட முயற்சித்தார்.
160 ரன்கள் டார்கெட்:
அக்ஷர் படேல், ஸ்டார்க், குல்தீப் யாதவ் ஆகியோர் கட்டுப்படுத்த பதோனி பவுண்டரிகளாக விளாசினார். இதனால், லக்னோ 150 ரன்களை கடந்தது. கடைசி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய பதோனி முகேஷ்குமார் பந்தில் போல்டானார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுக்க, அடுத்து வந்த கேப்டன் ரிஷப்பண்ட் போல்டானார். இதனால், 200 ரன்களை கடக்க வேண்டிய லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முகேஷ்குமார் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஸ்டார்க், சமீரா தலா 1 விக்கெட் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து, 160 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியுள்ளது.

