(Source: ECI | ABP NEWS)
எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
ஐபிஎல் இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றி 18 ஆண்டுகால காத்திருப்பை பூர்த்தி செய்வது யார் என்பதை காண ரசிகர்கள் அர்வமுடன் காத்திருக்கின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வென்று கோப்பையை முதல்முறையாக கைப்பற்றப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை கோப்பையே வெல்லாத பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
பெங்களூரு அணி விவரம்: பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்
பஞ்சாப் அணி விவரம்:
பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
உலகமே எதிர்பார்க்கும் ஐபிஎல் ஃபைனல்:
லீக் சுற்றின் முடிவில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தன. அதன்படி, இரு அணிகளும் மோதிய முதல் குவாலிஃபையரில் பஞ்சாப் அணியை ஊதி தள்ளி, அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இருப்பினும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற மும்பை அணியுடனான போட்டியில், கேப்டன் ஸ்ரேயஸ் அய்யரின் அட்டகாசமான ஆட்டத்தால் வென்ற பஞ்சாப் அணியும், இரண்டாவது வாய்ப்பின் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 36 முறை நேருக்கு நேர் மோதி, தலா 18 முறை வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில் மட்டும் 3 முறை மோதியதில் பெங்களூரு அணி 2 முறையும், பஞ்சாப் அணி ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு அணி சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதில் வென்று கோப்பையை கைப்பற்றி 18 ஆண்டுகால காத்திருப்பை பூர்த்தி செய்வது யார் என்பதை காண ரசிகர்கள் அர்வமுடன் காத்திருக்கின்றனர்.




















