IPL 2025 CSK vs KKR : டெஸ்ட் மேட்ச் ஆடிய சென்னை! கொல்கத்தா கொடூர பவுலிங்! இவ்வளவுதான் டார்கெட்டா?
IPL 2025 CSK vs KKR: சென்னை அணி கொல்கத்தா அணிக்கு 104 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பந்துவீச்சு தாக்குதல்:
சென்னை அணிக்காக ரச்சின் ரவீந்திரா - கான்வே களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலே சுழற்பந்துவீச்சாளரை அழைத்தார் ரகானே. ரகானே மொயின் அலியை அழைத்தற்கு பலன் கிடைத்தது. மொயின் அலி வீசிய நான்காவது ஓவரில் கான்வே 12 ரன்களில் அவுட்டானார். முன்னாள் சிஎஸ்கே வீரர்களான ரகானே - மொயின் அலி திட்டம் நன்றாக வேலை செய்தது.
வேகம், சுழல் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தாக்குதலில் ரவீந்திரா அவுட்டானார். அவர் ஹர்ஷித் ராணா பந்தில் 4 ரன்னில் அவுட்டானார். 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி பவர்ப்ளேவில் 6 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து,க ளமிறங்கிய விஜய் சங்கர் ராகுல் திரிபாதியுடன் கூட்டணி அமைத்தார்.
சென்னை தடுமாற்றம்:
அவர் தந்த எளிதான இரண்டு கேட்ச்சை கொல்கத்தா வீரர்கள் கோட்டை விட்டனர். சென்னை அணிக்காக அதிரடி காட்ட விஜய் சங்கர் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ஆனால், அவரை வருண் சக்கரவர்த்தி காலி செய்தார். அவர் 21 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் சுனில் நரைன் சுழலில் ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 16 ரன்களுக்கு அவுட்டானார்.
மொயின் அலி, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் என மாறி, மாறி சுழல் தாக்குதல் நடத்தினர். ஒரு பக்கம் ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா வேகப்பந்துவீச்சு தாக்குதல் நடத்தினர். 11 ஓவரில் 65 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது சென்னை.
கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட தீபக் ஹுடா:
5வது விக்கெட்டிற்கு அஸ்வின் களமிறங்கினார். மறுமுனையில் துபே நிதானம் காட்ட அஸ்வின் அதிரடி காட்ட முயற்சித்தார். அவர் 7 பந்துகளில் 1 ரன்கள் எடுத்த நிலையில் ராணா வேகத்தில் வைபவ் அரோராவிடம் கேட்ச் காடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா சுனில் நரைன் சுழலில் டக் அவுட்டானார். 71 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில், தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் இம்பேக்ட் வீரராக தீபக் ஹுடா களமிறங்கினார். 14 ஓவர்களில் 71 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சென்னை அணிக்காக அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஷிவம் துபே - தீபக் ஹுடா ஜோடி சேர்ந்தனர். ஆனால், இம்பேக்ட் ப்ளேயராக வந்த தீபக் ஹுடா வருண் சுழலில் அவுட்டானார்.
அவர் டக் அவுட்டான நிலையில், கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி - ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். ஆனால், கேப்டன் தோனியும் சுனில் நரைன் சுழலில் 1 ரன்னில் எல்பிடபுள்யூ ஆனார். 17 ஓவர்களில் 78 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்திருந்த நிலையில், கடைசி 2 விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி ஆளானது. ஆனால், அதிரடி காட்ட வேண்டிய நெருக்கடியால் நூர் அகமது 1 ரன்னில் அவுட்டானார்.
104 ரன்கள் டார்கெட்:
79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்த நிலையில், சென்னை அணி 100 ரன்களை கடக்குமா? என்ற நிலை எழுந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு 19வது ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசியில் சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்தது. ஷிவம் துபே 29 பந்துகளில் 3 பவுண்டரி மட்டுமே விளாசி 31 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மொயின் அலி 4 ஓவர்களில் 1 ஓவர் மெய்டனாக வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், ராணா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



















