எதிர்பாராததை எதிர்பாருங்கள்! குஜராத் கதையை முடிக்குமா சென்னை? இன்றைக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
கடந்த மூன்று போட்டிகளில் டாப்-3 அணிகளுக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகள் அதிர்ச்சி அளித்ததை போன்று, இன்று சென்னை ஏதேனும் மேஜிக் நிகழ்த்துமா? என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

குஜராத் அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. கடைசி லீக் போட்டியில் வென்று அடுத்தாண்டு தொடருக்கு சென்னை அணி விதை போடுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குஜராத் கதையை முடிக்குமா சென்னை?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜரத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆனாலும், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்புகளை வழங்கக் கூடிய, புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமிக்கப்போவது யார் என்பது தற்போது வரை உறுதியாகவில்லை.
குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அந்த இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இரண்டு அணிகளும் தோல்வியுற்று ஷாக் அளித்தன. அதேபோல நேற்றைய போட்டியில், டெல்லி அணியிடம் பஞ்சாப் தோல்வியுற்றது. இதனால், முதல் 2 இடங்களை பிடிக்கப்போவது யார் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இன்றைய நாளின் முதல் லீக் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம். எஸ். தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள்:
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்ய, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது குஜராத்திற்கு கட்டாயமாகும். அதேநேரம், சென்னை அணி நடப்பு தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறியதால், இந்த போட்டியின் முடிவு அவர்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இருப்பினும், கடந்த மூன்று போட்டிகளில் டாப்-3 அணிகளுக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகள் அதிர்ச்சி அளித்ததை போன்று, இன்று சென்னை ஏதேனும் மேஜிக் நிகழ்த்துமா? என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
சென்னை அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
குஜராத் அணி விவரம்: சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஷாருக்கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ஜெரால்ட் கோட்ஸி, சாய் கிஷோர், முகமது சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா.




















