IPL 2024 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
IPL 2024 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 3 முறை எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடியுள்ளது.
IPL 2024 Playoffs: ஐபிஎல் 2024 இன் பிளேஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடந்த சனிக்கிழமை நடந்த விறுவிறுப்பான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்காவது மற்றும் கடைசி அணி ஆனது. ஒருபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்று (மே 21ம் தேதி) முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன. இதில், வெற்றிபெறும் அணி வருகின்ற மே 26ம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும்.
மறுபுறம், அனைவரும் நாளை (மே 22ம் தேதி) நடைபெறும் எலிமினேட்டர் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த நாளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கிறது. இது பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டியாக இருக்கும். ஏனெனில், மே மாதம் நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடைந்தது இல்லை. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெற்றது இல்லை.
இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டர் போட்டியை பற்றியும் இங்கே பார்ப்போம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 3 முறை எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு அணியும் - ஆண்டு வாரியாக பிடித்த இடமும்:
ஆண்டு | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | தரவரிசை | முடிவுகள் |
---|---|---|---|---|---|---|
2008 | 14 | 4 | 10 | 0 | 7th | லீக் சுற்று |
2009 | 16 | 9 | 7 | 0 | 1st | இரண்டாம் இடம் |
2010 | 16 | 8 | 8 | 0 | 3rd | பிளே ஆஃப் |
2011 | 16 | 10 | 5 | 1 | 1st | இரண்டாம் இடம் |
2012 | 16 | 8 | 7 | 1 | 5th | லீக் சுற்று |
2013 | 16 | 9 | 6 | 0 | 5th | லீக் சுற்று |
2014 | 14 | 5 | 9 | 0 | 7th | லீக் சுற்று |
2015 | 16 | 8 | 6 | 2 | 3rd | பிளே ஆஃப் |
2016 | 16 | 9 | 7 | 0 | 1st | இரண்டாம் இடம் |
2017 | 14 | 3 | 10 | 1 | 8th | லீக் சுற்று |
2018 | 14 | 6 | 8 | 0 | 6th | லீக் சுற்று |
2019 | 14 | 5 | 8 | 1 | 8th | லீக் சுற்று |
2020 | 15 | 7 | 8 | 0 | 4th | எலிமினேட்டர் |
2021 | 15 | 9 | 6 | 0 | 3rd | எலிமினேட்டர் |
2022 | 16 | 9 | 7 | 0 | 4th | எலிமினேட்டர் |
2023 | 14 | 7 | 7 | 0 | 5th | லீக் சுற்று |
2024 | 14 | 7 | 7 | 0 | 4th | பிளே ஆஃப் |
ஆர்சிபியும், எலிமினேட்டர் போட்டியும்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. ஆனால் கோப்பையை ஒரு முறை கூட உயர்த்த முடியவில்லை. மேலும், பெங்களூரு அணி 2020 இல் முதல் முறையாக எலிமினேட்டர் போட்டியில் விளையாடியது. அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பெங்களூரு அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலக்கை துரத்திய ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்தாண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது.
அடுத்த சீசனில் அதாவது 2021ல் எலிமினேட்டர் சுற்றில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. துரதிஷ்டவசமாக இந்த முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் பெங்களூருவின் கோப்பையை வெல்லும் கனவு மீண்டும் தகர்ந்தது. 2022 ஆம் ஆண்டில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக எலிமினேட்டர் போட்டியில் விளையாடியது. இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. நல்லவேளையாக, இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை தோற்கடித்து குவாலிபையர் 2 இல் நுழைந்தது. ஆனால் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையடுத்து, புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இன்றுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.