PBKS vs RR Match Highlights: ரசிகர்களுக்கு செம ட்ரீட்! கடைசி வரை பரபரப்பு; பஞ்சாப்பை வீழ்த்திய ராஜஸ்தான்!
PBKS vs RR Match Highlights: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி சார்பில் கேசவ் மகராஜ் மற்றும் ஆவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் சென் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இலக்கைத் துரத்திய ராஜஸ்தான்
148 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கும் அதிரடியான தொடக்கம் அமையவில்லை. பந்து குத்தி மெதுவாக வந்ததால் சிக்ஸர்கள் விளாச முயற்சி செய்து விக்கெட்டினை இழக்காமல், நிதானமாகவே ரன்கள் சேர்த்து வந்தனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் கோடியன் கூட்டணி 7.1 ஓவரில் 50 ரன்கள் சேர்த்து பொறுப்பான தொடக்கத்தினை ஏற்படுத்திக் கொடுத்தனர். போட்டியின், 9வது ஓவரில் கோடியன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் களத்திற்கு வந்த சஞ்சு சாம்சனும் களத்தின் தன்மையை உணர்ந்து விளையாடினார். ஆனால் போட்டியின் 12வது ஓவரில் ஜெய்ஸ்வால் வெளியேறினார். அதேபோல், 14வது ஓவரின் இரண்டாவது பந்தில் கேப்டன் சஞ்சு சாம்சன் வெளியேறுனார். அப்போது அணியின் ஸ்கோர் 89 ரன்களாக இருந்தது. இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 5.4 ஓவரில் 59 ரன்கள் தேவைப்பட்டது.
ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப்
களத்தில் ரியான் பிராக் மற்றும் ஜூரோல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி சிறப்பாக பந்து வீசி ரன்களை வாரிக்கொடுக்காமல் தடுத்து வந்தனர். ஆனால் ராஜஸ்தான் அணியின் ரியான் ப்ராக் மற்றும் துருவ் ஹூரேல் ஆட்டத்தின் 17வது மற்றும் 18வது ஓவரில் மெதுவாக வந்த பந்துகளை சிக்ஸர் விளாச நினைத்து தூக்கி அடிக்க முயற்சி செய்து தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இதனால் இரு அணி ரசிகர்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆட்டத்தில் ஒவ்வொரு பந்தும் மாறி மாறி பஞ்சாப்புக்கு சாதகமாகவும் ராஜஸ்தானுக்கு சாதகமாகவும் மாற மைதானம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரத்தில் குதித்தனர். ரியான் ப்ராக் மற்றும் துருவ் ஜுரேல் விக்கெட்டினை இழந்த பின்னர் களத்துல் ஹெட்மயர் மற்றும் பவல் இருந்தனர். இருவரும் ஹிட்டர்கள் என்பதால் ராஜஸ்தான் அணியினருக்கு நம்பிக்கை சற்று அதிகமாக இருந்தது.
கடைசி இரண்டு ஓவர்கள்களில் ராஜஸ்தான் வெற்றுக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை சாம் கரன் வீச முதல் இரண்டு பந்துகளை அசால்டாக பவுண்டரிக்கு விளாசினார் பவல். மூன்றாவது பந்தில் பவல் தனது விக்கெட்டினை இழக்க, பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்துகொண்டே இருந்தது. அடுத்த மூன்று பந்தில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து மற்றொரு விக்கெட்டினையும் கைப்பற்றினார் சாம் கரன்.
த்ரில் வெற்றி
இதனால் ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். களத்தின் ஹெட்மயர் இருந்தார். முதல் இரண்டு பந்துகளை டாட் பாலாக வீசி அர்ஷ்தீப் சிங் அசத்த, மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் ஹெட்மயர். நான்கவது பந்தில் இரண்டு ரன்களும், ஐந்தாவது பந்தில் சிக்ஸரும் விளாசி ராஜஸ்தான் அணியை வெற்றி பெறவைத்தார்.