PBKS vs RR Innings Highlights: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்; போராடி 147 ரன்கள் சேர்த்த பஞ்சாப்!
IPL 2024 PBKS vs RR Innings Highlights: முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து147 ரன்கள் சேர்த்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி சார்பில் கேசவ் மகராஜ் மற்றும் ஆவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் சென் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியை சாம் கரன் வழிநடத்தினார். ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் சாம் கரன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை அதர்வா மற்றும் பேரிஸ்டோவ் தொடங்கினர். இருவரும் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்ததால், பஞ்சாப் அணியின் ஸ்கோர் மிகவும் ஸ்லோவாக முன்னேறியது. போட்டியின் நான்காவது ஓவரில் அதர்வா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ப்ரப்சிம்ரன் நிதாமாகவே விளையாடி வந்தார். ஒரு கட்டத்தில் அதாவது பவர்ப்ளேவிற்குப் பின்னர் தனது விக்கெட்டினை சஹால் பந்தில் இழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ஜானி பேரிஸ்டோவ் வெளியேற பஞ்சாப் அணி பெரும் நெருக்கடிக்குள்ளானது.
நெருக்கடியான சூழலில் கைகோர்த்த சாம் கரன் மற்றும் ஷஷாங்சிங் கூட்டணி பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களில் அசத்தலான பந்து வீச்சினால் பஞ்சாப் அணி வீரர்கள் ரன் எடுக்க சிரமப்பட்டதுடன், விக்கெட்டுகளை மளமளவென இழந்து வெளியேறினர்.
ராஜஸ்தான் அணியினரின் சவலான பந்து வீச்சினாலும், சிறப்பான ஃபீல்டிங்கினாலும் பஞ்சாப் அணி ரன்கள் எடுக்க சிரமப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணிக்கு இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய அஷுதோஷ் சர்மா 16 பந்தில் ஒரு பவுண்டரி மூன்று சிக்ஸர் உட்பட 31 ரன்கள் சேர்த்து போட்டியின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.