MI Playing XI: 6வது கோப்பைக்காக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன் இதுவா?
Mumbai Indians: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 24ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் முக்கியமான அணி என்றால் மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களை ஒரு புத்தகமாக தொகுத்தால் அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் பாதிப் பக்கங்களை ஒதுக்க வேண்டி இருக்கும். அதற்கு காரணம் மும்பை அணி வென்ற 5 கோப்பைகள் மட்டும் கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல்லின் தொடக்கத்தில் சச்சின் தெண்டுல்கரின் தலைமையில் களம் கண்டது. அதன் பின்னர் ரிக்கி பாண்டிங் தலைமையில் களமிறங்கியது. ஆனால் 2013ஆம் ஆண்டின் பாதியில் இருந்து ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது. அதில் இருந்து கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றது. 5 முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையும் மும்பை இந்தியன்ஸ் அணி படைத்தது.
ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதான பார்வை முற்றிலும் மாறிவிட்டது. அது களத்தில் மட்டும் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் ஏலத்திற்கு வந்தாலே மும்பை அணியின் மீதான ஹைப் அதிகரித்துவிடும்.
இப்படியான மும்பை அணி கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சில வீரர்களை எடுத்தது. அதில், மிகவும் முக்கியமானவர்களாக பார்க்கப்பட்டது, தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கோட்ஸீ, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்சன் மதுஷன்கா ஆகியோர். ஏலத்திற்குப் பின்னர் மும்பை அணி குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் செய்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னரும் அதன் பின்பும் மிகப்பெரிய அதிர்வலையை ஐபிஎல் வட்டாரத்தில் இது ஏற்படுத்தியது. இந்த அதிர்வலை அடங்குவதற்கு ரோகித் சர்மாவிடம் இருந்த மும்பை அணியின் கேப்டன்சி ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.
இப்படியான மும்பை அணியின் இந்த ஆண்டு ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும்? யார் யாருக்கு வாய்ப்பு உள்ளது என்பதைக் காணலாம்.
மும்பை அணியின் பலமாக எப்போதும் பார்க்கப்படுவது அதன் பேட்டிங் லைனப் தான். மும்பை அணியின் பேட்டிங்கை கடப்பரை பேட்டிங் என்று அழைப்பது வழக்கம். அதேபோல் இம்முறையும் மும்பை அணியின் பேட்டிங் லைனப் பலமாகவே உள்ளது.
மும்பை அணியின் பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நேகல் வதேரா உள்ளிட்ட உள்நாட்டு வீரர்கள் உள்ளனர். அதேபோல் டிம் டேவிட் மற்றும் ப்ரீவிஸ் என இரண்டு வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் பும்ரா, பியூஸ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஜுன் தெண்டுல்கர், குமார் கார்த்திகேயா என ஐந்து உள்நாட்டு வீரர்களும், ஜோசன் பெஹரண்டார்ஃப், கோட்ஸீ, தில்சன் மதுஷன்கா மற்றும் முகமது நபி என நான்கு வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
ஐபிஎல் விதிப்படி, ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் ப்ளேயிங் லெவனில் இடம் கொடுக்க முடியும். மேலும் இம்பேக்ட் ப்ளேயர் விதிப்படி, ஒரு ப்ளேயரை எதாவது ஒரு இன்னிங்ஸில் மாற்றிக்கொள்ளலாம். இம்பேக்ட் விதிப்படி கேப்டனை மாற்றமுடியாது. மேலும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே ப்ளேயிங் லெவனில் இருந்தால் அவர்களில் ஒருவரை வெளியேற்றிவிட்டு வேறு வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியாது. ஒரு அணி களமிறங்கும்போது மூன்று வெளிநாட்டு வீரருடன் களமிறங்கினால் மட்டும் இம்பேக்ட் ப்ளேயர் விதியை பயன்படுத்தி நான்காவது வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியும்.
இப்படியான நிலையில் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்புள்ள வீரர்களாக கருதப்படும் வீரர்கள்.
மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் ப்ளேயிங் லெவன்
ரோகித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், ப்ரீவிஸ், கோட்ஸீ, ஆகாஷ் மத்வால், பும்ரா, தில்சன் மதுஷன்கா/ ஜாசன் பெஹண்டார்ஃப்.
இம்பேக்ட் ப்ளேயர்: ப்ரீவிஸை வெளியேற்றிவிட்டு பியூஸ் சாவ்லாவை களமிறக்கலாம்.
மும்பை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தால் ப்ளேயிங் லெவன்
ரோகித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், கோட்ஸீ, ஆகாஷ் மத்வால், பும்ரா, தில்சன் மதுஷன்கா, பியூஸ் சாவ்லா
இம்பேக்ட் ப்ளேயர்: பியூஸ் சாவ்லாவை வெளியேற்றிவிட்டு ப்ரிவிஸ் அல்லது விஷ்ணு வினோத்தை களமிறக்கலாம்.