Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்த அணி என்ற தனது முந்தைய சாதனையை, மும்பை அணி தானே இப்போது முறியடித்துள்ளது.
ஐபிஎல் 2024ன் நேற்றைய 67வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 196 ரன்கள் மட்டுமே எடுத்து, இந்த ஐபிஎல் சீசனில் 10வது தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், ஒரு ஐபிஎல் சீசனில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்த அணி என்ற தனது முந்தைய சாதனையை, மும்பை அணி தானே இப்போது முறியடித்துள்ளது.
அதிக தோல்விகள்:
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024ல் 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன் அந்த அணி கடந்த 2022ம் ஆண்டு 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் 2024ன் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி வெறும் 4 போட்டிகளிலும் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது. முதலில் குஜராத், ஹைதராபாத், சென்னை, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ மற்றும் கொல்கத்தா என அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
இரண்டு முறை கடைசி இடம்:
2009ல் மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதன் பிறகு, 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும் அந்த அணி 8-8 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. 2022 சீசனில் 10 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது, இப்போது 2024 இல் அந்த அணி 10 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. மும்பை சொந்த மைதானத்தில் விளையாடிய 7 போட்டிகளில் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது முக்கியமான விஷயம். மற்ற மைதானங்களில் 1 ஆட்டத்தில் மட்டுமே வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்தது.
இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் புள்ளிகள் பட்டியலில் இரண்டு முறை கடைசி இடத்தை பிடித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, எந்தவொரு அணியும் இரண்டு முறை கடைசி இடத்தை பிடித்தது இல்லை.
கடந்த 2022ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024ம் ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
இந்த சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்கள்:
ஐபிஎல் 2024ல் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுத்துள்ளார். இவர் இதுவரை 14 போட்டிகளில் 1 சதம் மற்றும் 1 அரை சதம் உள்பட 417 ரன்கள் எடுத்துள்ளார். இவரை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் இளம் வீரர் திலக் வர்மா உள்ளார். இவர் இதுவரை 13 போட்டிகளில் 3 அரைசதம் உள்பட 416 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஐபிஎல் 2024 சீசனில் அதிக ரன்கள் எடுத்த முதல் 10 வீரர்கள் பட்டியலில் மும்பை பேட்ஸ்மேன் ஒருவர் கூட இல்லை. ஐபிஎல் 2024ல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி 661 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
பந்துவீச்சை பொறுத்தவரை மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே, 13 போட்டிகளில் 20 விக்கெட்களுடன் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.