MI vs CSK Match Highlights: ரோகித் சர்மா சதம் வீண்; மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
IPL 2024 MI vs CSK Match Highlights: மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17வது சீசன் ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி சார்பில் கேப்டன் ருதுராஜ் 69 ரன்களும் ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்திருந்தனர். ஆட்டத்தின் கடைசி நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி ஹாட்ரிக் சிக்ஸருடன் மொத்தம் 20 ரன்கள் குவித்தார்.
இலக்கைத் துரத்திய மும்பை
அதன் பின்னர் 207 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் நிதானமாக தொடங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் இருந்து சிக்ஸர் கணக்கை ரோகித் சர்மா தொடங்கி வைக்க, ஆட்டத்தில் ரன்மழை பொழிய ஆரம்பித்தது. ரோகித் சர்மாவை கட்டுப்படுத்த சென்னை அணி வீரர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாக போனது. ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தினை தொடர்ந்ததால் பவர்ப்ளேவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் ஆட்டத்தின் 8வது ஓவரினை பத்திரானா வீசினார். இந்த ஓவரில் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் வெளியேறினார். இது மும்பை அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நம்பிக்கை அளித்த திலக் வர்மா
அதன் பின்னர் வந்த திலக் வர்மா தொடக்க வீரர் ரோகித் சர்மாவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா பவுண்டரிகளைவும் சிக்ஸர்களையும் விளாசினார். அணியின் ஸ்கோர் 130 ரன்களாக இருந்தபோது திலக் வர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, அதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா வந்தார். ஆனால் அவரால் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
சென்னை வெற்றி
ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை இழந்த பின்னர் களத்திற்கு வந்த டிம் டேவிட் அதிரடியாக இரண்டு சிக்ஸர்கள் விளாசி, மூன்றாவது பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஷெப்பர்ட் தனது விக்கெட்டினை ஒரு ரன்னில் இழந்து வெளியேறினார். கடைசி இரண்டு ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா இறுதிவரை களத்தில் தனது விக்கெடினை இழக்காமல், 63 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட மொத்தம் 105 ரன்கள் சேர்த்திருந்தார்.