IPL 2024 CSK : நெருக்கடியில் களமிறங்குகிறதா சென்னை? ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய என்ன செய்யவேண்டும்?
IPL 2024 Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
கிரிக்கெட் உலகில் நடைபெறும் மிக நீண்ட, அதிகப்படியான சர்வதேச வீரர்கள் விளையாடுகின்ற மற்றும் அதிக பணம் புழங்கும் லீக் தொடர் என்றால் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர்தான். இந்த தொடரின் 17வது லீக் போட்டியில் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றன. இதில் நடப்புச் சாம்பியனாக இருக்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை அணிக்கு இந்தியாவில் எங்கு சென்று விளையாடினாலும் சென்னை அணியின் ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்துவிடுகின்றனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை (2016 மற்றும் 2017 தவிர) சென்னை அணியினை வழிநடத்த்தி, ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பைகளை வென்ற கேப்டன் என ரோகித் சர்மாவின் சாதனையை சமன்படுத்தினார் தோனி. இந்த ஆண்டில் இருந்து அணியில் ஒரு வீரராக செயல்படும் தோனி, தற்போது நியமிக்கப்பட்டுள்ள கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு களத்தில் பல அறிவுரைகளை தக்க சமயத்தில் வழங்கியும் வருகின்றார்.
CSK-வின் தற்போதைய நிலை
இந்நிலையில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 லீக் போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் +0.810 ரன்ரேட்டில் உள்ளது. சென்னை அணி புள்ளிப்பட்டியலில் தற்போது உள்ள நிலை என்பது அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு சௌகரியமான இடமாக இருந்தாலும், சென்னை அணிக்கு மீதமுள்ள லீக் போட்டி முடிவுகளின் அடிப்படையிலேயே சென்னை அணியால் அடுத்த சுற்றுக்குக்கு தகுதி பெற முடியுமா முடியாதா என்பதை உறுதிபடுத்த முடியும்.
சென்னை அணிக்கு இன்னும் 5 லீக் போட்டிகள் மீதமுள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடவுள்ளது. மூன்று போட்டிகளில் வெளிமைதானங்களில் விளையாடவுள்ளது. 5 லீக் போட்டிகளில் சென்னை அணி பஞ்சாப் அணியுடன் இரண்டு போட்டிகளிலும் குஜராத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும் விளையாடவுள்ளது. இதில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடவுள்ளது.
சென்னை அணி செய்யவேண்டியது என்ன?
சென்னை அணி தனது அடுத்த சுற்று வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றால் அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்தால் எந்தவிதமான சிரமும் இல்லாமல் அடுத்த சுற்றினை உறுதிப்படுத்திவிடும். அதேநேரத்தில் சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடும் இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றியை பெறுவதுடன் வெளிமைதானங்களில் விளையாடும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியிலாவது வெற்றியை பெற்றாக வேண்டும். அவ்வாறு வெற்றியை எட்டினால் மட்டும்தான் 16 புள்ளிகளுடன் குறைந்தபட்சம் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தினை எட்டமுடியும்.
நெருக்கடி கொடுக்கும் ஹைதராபாத் - கொல்கத்தா
அதேநேரத்தில் சென்னை அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் அணியாக பார்க்கப்படுவது ஹைதராபாத் அணி. இந்த அணியும் 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி 4இல் தோல்வி என புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் +0.075 ரன்ரேட்டில் உள்ளது. ஹைதராபாத் அணிக்கு அடுத்துள்ள 5 லீக் போட்டிகளில் 4 லீக் போட்டிகள் தனது சொந்த மைதானத்தில் களமிறங்கவுள்ளது. இதில் ஒரு போட்டியில் மும்பை அணியை வான்கடேவில் எதிர்கொள்ளவுள்ளது. ஹைதராபாத் அணி தனது சொந்த மைதானத்தில் களமிறங்கும் 4 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துவிட்டாலே ப்ளேஆஃப் சுற்றினை எட்டிவிடும். இதில் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோவுக்கு எதிராக கட்டாயம் வெற்றியை பெற்றால் அது சென்னை அணிக்கும் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
அதேபோல் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணிக்கு இன்னும் 5 லீக் போட்டிகள் உள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் நான்கு இடங்களுக்குள் இருக்கக் கூடிய லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி கட்டாயம் வெற்றி பெறுவதுடன் மும்பை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெறவேண்டும் அவ்வாறு வெற்றி பெற்றால் மட்டும்தான் ப்ளேஆஃப் சுற்றுவாய்ப்பினை கொல்கத்தா அணி சுலபமாக்க முடியும். இந்த போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவினால் அது முழுக்க முழுக்க சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
இப்படியான நிலையில் சென்னை அணி இன்று அதாவது மே 1ஆம் தேதி தனது சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது.