IPL Auction 2024: ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? வெறும் 3 பேருக்குதான் ரூ.2 கோடி அடிப்படை தொகை
IPL Auction 2024: அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 2 கோடி ரூபாய் அடிப்படை தொகை பிரிவில், இந்திய வீரர்கள் 3 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
IPL Auction 2024: அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரூ.1 கோடி மற்றும் ரூ.1.5 கோடி பிரிவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை.
ஐபிஎல் ஏலம் 2024:
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், தற்போது சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது. 40 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த தொடரை, கிரிக்கெட் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் இந்த தொடரில் பங்கேற்க, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு ஆர்வம் காட்டும் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தங்களது பெயர்களை முன்பதிவு செய்கின்றனர். அதில் 2 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரையிலான பிரிவில் வீரர்கள் வகைப்படுத்தப்பட்டு, ஏலம் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
ஏலத்தில் இடம்பெறும் 333 வீரர்கள்:
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 333 வீரர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர். இதில் அதிகபட்ச அடிப்படை தொகையான 2 கோடி ரூபாய் பிரிவில் மொத்தம் 23 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் வெறும் 3 பேர் மட்டுமே இந்தியர்கள் ஆவர். அதைதொடர்ந்து, ரூ.1.5 கோடி மற்றும் ரூ. 1 கோடி பிரிவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் அந்த 3 வீரர்கள்?
அதிகபட்ச அடிப்படை தொகையான 2 கோடி ரூபாய் பிரிவில் இந்தியாவை சேர்ந்த 3 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதன்படி, ஹர்ஷல் படேல், ஷ்ரதூல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் 2 கோடி ரூபாய் பிரிவில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். கடந்த சீசனில் 10.75 கோடி ரூபாய்க்கு ஹர்ஷல் படேலை பெங்களூரு அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டரான ஷ்ரதுல் தாக்கூரை கொல்கத்தா அணி 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. உமேஷ் யாதவையும் கடந்த சீசனில் அடிப்படை தொகையான 2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2024ம் ஆண்டு சீசனை முன்னிட்டு அந்த வீரர்களை அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன.
ரூ. 50 லட்சம் பிரிவில் இந்திய வீரர்கள்:
நான்கவது அதிகபட்ச அடிப்படை தொகையான 50 லட்ச ரூபாய் பிரிவில் இந்திய வீரர்கள் 11 பேர் இடம்பெற்றுள்ளன. அதில் மணீஷ் பாண்டே போன்ற பிரபலமான வீரர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மணீஷ் பாண்டே
- கருண் நாயர் -
- ஜெய்தேவ் உனத்கட்
- சேத்தன் சகாரியா
- சிவம் மாவி -
- கே. எஸ். பாரத்
- சந்தீப் வாரியர்
- பரிந்தர் ஸ்ரான்
- சித்தார்த் கவுல்
- வருண் ஆரோன்
- ஹனும விஹாரி