KKR vs SRH: சதம் விளாசி மிரட்டிய ஹாரி ப்ரூக்..! ருத்ரதாண்டவம் ஆடிய சன்ரைசர்ஸ்..! கொல்கத்தாவிற்கு 229 ரன்கள் டார்கெட்..!
ஹாரி ப்ரூக்கின் மிரட்டலான சதம், மார்க்ரம், அபிஷேக் அதிரடியால் கொல்கத்தா அணிக்கு 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை சன்ரைசர்ஸ் நிர்ணயித்துள்ளது.
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 19வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
மிரட்டிய சன்ரைசர்ஸ்:
இதைத்தொடர்ந்து, சன்ரைசர்ஸ் அணிக்காக ஹாரி ப்ரூக் – மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தனர். ஹாரி ப்ரூக் அதிரடியாக ஆடினார். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலே அவர் பவுண்டரிகளாக விளாசினார். மறுமுனையில் தடுமாற்றத்துடனே ஆடிய மயங்க் அகர்வால் ரஸல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக ஆட முயற்சித்தார். களமிறங்கியவுடன் 2 பவுண்டரிகளை விளாசிய ராகுல் திரிபாதி 9 ரன்களில் ரஸல் அவுட்டானார். ஆனாலும், மறுமுனையில் ப்ரூக் அதிரடி காட்டினார். பவர்ப்ளேவான 6 ஓவர்களில் 65 ரன்களை எடுத்தது.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் ப்ரூக் அதிரடியாக ஆடினார். அவருக்கு கேப்டன் மார்க்ரம் ஒத்துழைப்பு அளித்தார். இதனால், 10 ஓவர்களில் 94 ரன்களை சன்ரைசர்ஸ் அணி விளாசியது. தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டிய ஹாரி ப்ரூக் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய மார்க்ரம் சிக்ஸர்களாக விளாசினார். இதனால், சன்ரைசர்ஸ் ரன் எகிறியது. அதிரடியாக ஆடிய மார்க்ரம் 25 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் அரைசதம் விளாசினார். அவர் 26 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினார். ஆனாலும், சன்ரைசர்ஸ் அணி 13 ஓவர்களில் 130 ரன்களை எட்டியிருந்தது.
ஹாரி ப்ரூக் சதம்:
அவரைத் தொடர்ந்து ப்ரூக்குடன் அபிஷேக் ஜோடி சேர்ந்தார். ஆனாலும், அதிரடியை கொஞ்சமும் குறைக்காத ஹாரி ப்ரூக் பேட்டிங்கில் மிரட்டினார். குறிப்பாக பெர்குசன் வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில் அபிஷேக்கும் அதிரடிக்கு மாறினார். ஓவருக்க 10 ரன்கள் என்ற ஸ்ட்ரைக் குறையாமல் சன்ரைசர்ஸ் வீரர்கள் பார்த்துக்கொண்டனர். 18 ஓவர்களிலே சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களை எட்டியது.
சன்ரைசர்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடிய அபிஷேக் 17 பந்துகளில் 32 ரன்களுடன் அவுட்டானார். அவர் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக ரஸல் ஒரு பந்து மட்டுமே வீசிய நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார். தொடர்ந்து அந்த ஓவரை மட்டும் ஷர்துல் தாக்கூர் வீசினார். அவரது ஓவரில் ப்ரூக் மற்றும் கிளாசென் பவுண்டரியாக விளாசினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹாரி ப்ரூக் சதம் விளாசினார். இந்த ஐ.பி.எல். சீசனில் முதல் சதத்தை ஹாரி ப்ரூக் பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 229 ரன்கள் எடுத்தது. ஹாரி ப்ரூக் 100 ரன்களுடனும், கிளாசென் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த தொடரின் அதிகபட்ச ரன்னாக இது பதிவானது.
மேலும் படிக்க: ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்
மேலும் படிக்க: Hardik Pandya Fined: பாண்ட்யாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம்...! நடப்பு ஐ.பி.எல்.லில் 3வது கேப்டன்..! என்னதான் காரணம்..?